1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (21:08 IST)

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான், நாளை செலுத்தப்படுகிறது

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், நாளை அதன் சுற்று வட்டப் பாதையில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை நேரில் காண, பிரதமர் நரேந்திர மோடி, இன்று இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்கிறார்.
 
10 மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தைச் சுற்றுவட்டப் பாதையில் செலுத்துவதற்கு முன்னோட்டமாக இதன் திரவ எஞ்சின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
 
இதையடுத்து, இதன் செயல்பாடுகள் சரியாத விதத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 
இந்த விண்கலம் துல்லியமாகத் திட்டமிட்ட பாதையில் செல்வதாகவும் குறித்த நேரத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை அடையும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
நாளை காலை மணி 7.17க்கு இந்த விண்கலம், சுற்று வட்டப் பாதையில் செலுத்தப்படும் என்றும் அதற்கு 24 நிமிடங்கள் முன்னதாக, எரிபொருள் இயந்திரம் இயக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
பெங்களுரு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் இதற்கான கட்டளைகளைப் பிறப்பிப்பார்கள். இதனை நரேந்திர மோடி, நேரில் பார்வையிட உள்ளார்.
 
அமெரிக்கா, ரஷ்யா போன்று உலகின் வெகுசில நாடுகளே இதுவரை செவ்வாய் கிரகத்திற்கான முதல் பயணத்தில் வெற்றி பெற்றுள்ள இந்தியாவின் மங்கள்யானின் செயல்பாடு தொடர்ந்து சாதனை நிகழ்த்த உள்ளதாக இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
 
மங்கள்யாணில் பொருத்தப்பட்டுள்ள 5 கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப நிலை, மேல்பரப்பு, மீத்தேன் வாயு குறித்த பரிசோதனை ஆகியவை நடத்தப்பட உள்ளது.