ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 20 மே 2024 (19:00 IST)

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

Iran President
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் நாளை ஒரு நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.
 
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று அண்டை நாடான அசர்பைஜான் சென்றார். அந்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்காக அவர் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அதிபர் இப்ராஹிம் ரைசி மீண்டும் ஈரான் திரும்பிக் கொண்டிருந்தார். 
 
ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஜோல்பா நகர் அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. 
 
விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணித்த 9 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவுக்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை ஒரு நாள் இந்தியாவில் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது. 


துக்க நாளில், நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும் அன்றைய தினம் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.