என்ன இந்த மாதிரி சாப்பிடுகிறார்? – வியப்பை அளிக்கும் ட்ரம்ப்பின் உணவு பழக்கம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இந்தியா வருவதையொட்டி அவருக்காக சிறப்பு உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உணவு பழக்கம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவரை வரவேற்க அகமதாபாத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ட்ரம்ப் மற்றும் அவருடன் வரும் அதிகாரிகளுக்காக பிரபல ஸ்டார் ஹோட்டல் உணவுகளை தயாரித்து வருகிறது.
குஜராத்திய வகை உணவுகளை அவருக்கு வழங்க விரும்பி குஜராத் இஞ்சி டீ, தானிய பிஸ்கெட்டுகள், சோள சம்சா என தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ட்ரம்ப்புக்கு டீ குடிக்கும் பழக்கமே கிடையாதாம். டீடோட்லரான ட்ரம்ப் டீ, காபி, மதுவகைகள் என எதையுமே அருந்த மாட்டாராம். இதுவரை தன் வாழ்வில் ஒருமுறைகூட தான் மது அருந்தியதில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.
காலை நேரங்களில் சாப்பிடும் பழக்கம் ட்ரம்ப்புக்கு இல்லை. வென்பன்றி இறைச்சியுடன், முட்டையை கலந்து சாப்பிடும் பழக்கம் உடையவர். மேலும் டயட் கோக் என்றால் ட்ரம்ப்புக்கு ரொம்ப பிடிக்குமாம். ஒருநாளைக்கு 15க்கும் மேல் டயட் கோக் குடிப்பாராம்! சாக்லேட் மில்க்ஷேக், சிப்ஸ் வகைகள் ரொம்ப இஷ்டமாக சாப்பிடுவாராம்.
ட்ரம்ப்பின் உணவு பழக்க வழக்கம் குறித்து இந்த தகவல்களை அறிந்த பலர் ரொம்ப வித்தியாசமான உணவு பழக்கம் உடையவராக இருக்கிறாரே என ஆச்சர்யப்பட்டுள்ளனர்.