மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க கோரும் அமலாக்க துறை
கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இந்தியாவை கொண்டுவர சர்வதேச காவல்துறையினரின் உதவியை அமலாக்கத்துறை நாடியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கியுள்ள ‘மதுபான ஆலை முதலாளி’ விஜய் மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஒடி விட்டார். இதுதொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மல்லையா மீது, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, அவருக்கு மார்ச் 18, ஏப்ரல் 2, 9 என மூன்று முறை வாய்ப்பு அளித்தது. ஆனால் கடைசிவரை அவர் ஆஜராகவில்லை.
இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் மல்லையாவுக்கான பாஸ்போர்ட்டை, பாஸ்போர்ட் சட்டப் பிரிவு 10 (ஏ)-கீழ் முடக்கி உத்தரவிட்டது.
பின்னர், விஜய் மல்லையா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அரசிடம் இந்திய அரசு முறையிட்டது.
இந்தியாவின் கோரிக்கையை பரிசீலித்த இங்கிலாந்து அரசு, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை மூலம் அறிக்கை வெளியிட்டது.
இதனையடுத்து, மல்லையாவை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்குமாறு, இண்டர் போல் போலீசாரை, மத்திய அமலாக்க அதிகாரிகள் கோரியுள்ளனர். இதனையொட்டி, ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறும், காவல்துறையினரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.