வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2016 (11:52 IST)

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சக ஆலோசனை கமிட்டி யோசனை கூறியுள்ளது.


 

 
வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் பான் கார்டு எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் மத்திய நியமைச்சர் அருண் ஜேட்லியிடம் அமைச்சக ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் யோசனை தெரிவித்தனர்.
 
பிப்ரவரி 29 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்துடன் இணைந்த ஆலோசனை கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் கலந்து கொண்டார். அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், வரி ஏய்ப்பு செய்வோருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
தற்போது, ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனைக்கு பான் கார்டு எண்ணை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
 
இவ்வகை பரிவர்த்தனை தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் உறுப்பினர்கள் யோசனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அத்துடன், வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும், வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஏழைகள் மற்றும் சாமானியருக்கு ஏற்ற பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் தங்கள் யோசனை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த கூட்டத்தில் அருண் ஜேட்லி பேசியதாவது:-
 
பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்னும் வேகமாக முன்னேறக் கூடிய திறண் கொண்டுள்ளது.
 
எனவே, நிதி பற்றாக்குறை இலக்கு, மதிப்பிட்ட இலக்கிற்கு உள்ளேயே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
 
பருவமழை தவறியதால், கடந்த 2 ஆண்டுகளாக விவசாயத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், வறட்சி நிவாரணமாக மாநிலங்களுக்கு அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர் வரும் பட்ஜெட்டில், விவசாய உற்பத்தியை பெருக்க விவசாய துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும்.
 
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 7 ஆவது ஊதிய கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
 
ராணுவத்தினருக்கு "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்" திட்டத்தையும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
 
இவற்றை அமல்படுத்துவதற்காக, வருகிற பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டி உள்ளது.
 
பட்ஜெட் மதிப்பீட்டை விட உண்மையான செலவு அதிகமாக இருப்பது இதுவே முதல்முறை ஆகும். என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.