1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : திங்கள், 14 ஜூலை 2014 (20:35 IST)

வருமான வரி குறித்த போலி மின்னஞ்சல் தகவல்களை நம்ப வேண்டாம்

வருமான வரி செலுத்த வேண்டிய விவரங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி வரி செலுத்துவோர் பலருக்கு மின் அஞ்சல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மின் அஞ்சல் "[email protected]"  முகவரியிலிருந்து இந்தத் தகவல் கிடைத்துள்ளது. இது போலியானது என்றும், வருமான வரித் துறைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
 
இது போன்ற எந்தத் தகவலையும் வருமான வரித் துறை gmail, yahoo போன்ற மின் அஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புவது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், வருமான வரி செலுத்துவோர் இது போன்ற மின் அஞ்சலுக்கு எந்த விதமான பதில் அளிப்பதோ அல்லது இணைத்து அனுப்பப்படும் எந்தவிதமான ஆவணத்தையோ பதிவு இறக்கம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
இது போன்று ஏதேனும் போலியான மின் அஞ்சல் வந்தால் வருமான வரி துறையின் தேசிய இணையத்தளத்தில் உள்ள 'ரிப்போர்ட் ப்பிஷிங்' (Report phishing) பகுதியைப் பார்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் வருமான வரி செலுத்துவோர், வருமான வரித் துறையின் www.incometaxindia.gov.in இணையத் தளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வருமான வரித் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.