1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 28 மே 2015 (21:46 IST)

மாட்டுக்கறி சாப்பிடும் விவகாரம்: முக்தர் அப்பாஸ் நக்விக்கு எதிராக எதுவும் கூறவில்லை: கிரண் ரிஜிஜூ

மாட்டுக்கறி சாப்பிடும் விவகாரம் குறித்த சர்ச்சையில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸூக்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை என்று மற்றொரு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
 

 
மேலும் ரிஜிஜூ கூறுகையில், "உணவு விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து, தேவை இருக்கும். அதை கட்டுப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன்'' என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
 
நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த, முக்தர் அப்பாஸ் நக்வி, மூன்று நாட்களுக்கு முன் அளித்த பேட்டியொன்றில் " மகாராஷ்டிராவில், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல, விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்; மேலும் மாட்டுக்கறி சாப்பிட விரும்புபவர்கள் - பாகிஸ்தானுக்கு போகட்டும்" என்றார்.
 
நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் கருத்து குறித்து, அருணாச்சல பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவரும், பாஜகவைச் சேர்ந்தவருமான உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "உணவு விஷயத்தில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாது. நான், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவன்; மாட்டிறைச்சி சாப்பிடுவேன். மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என எனக்கு உத்தரவிட முடியாது" என்று கூறியிருந்தார்.
 
ஒரே கட்சியை சேர்ந்த இரு அமைச்சர்களுக்குள்ளும்  கருத்து வேறுபாடு உள்ளன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதையடுத்து நேற்று, அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்தார். ''முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதை நான் மறுக்கவில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப, அங்கு பெரும்பான்மையாக வாழும் மக்களின் அடிப்படையில் உணவு பழக்க வழக்கமும் இருக்கும் என்றுதான் கூறினேன்'' என்று கூறினார்.