1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2016 (12:11 IST)

’ஆபாச வீடியோவில் உம்மன் சாண்டியுடன் இருப்பது நான் இல்லை’ : சரிதா நாயர்

’ஆபாச வீடியோவில் உம்மன் சாண்டியுடன் இருப்பது நான் இல்லை’ : சரிதா நாயர்

உம்மன் சாண்டியுடன் நான் இருப்பது போன்ற ஆபாச வீடியோ பொய்யானது என்றும் என்னை மது ஆலை உரிமையாளர்கள் பின்னிருந்து இயக்குகின்றனர் என உம்மன்சாண்டி கூறுவது தவறு என்றும் சரிதா நாயர் கூறியுள்ளார்.
 

 
திரைப்பட நடிகை சரிதா நாயர், கோவையில் ஐசிஎம்எஸ் எனும் பெயரில் சூரிய மின்சக்தி உபகரணங்களை விற்பனை செய்து வந்தார். இவரிடம் கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜன் ரூ. 28 லட்சம், உதகையை சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட் ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ. 5.50 லட்சம் ரொக்கப் பணத்தினை சோலார் பேனல் அமைப்பதற்காக கொடுத்தனர்.
 
ஆனால், சரிதா நாயர் சோலார் பேனல் அமைக்கவோ, பணத்தை திருப்பித் தரவோ இல்லை. இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சரிதா நாயர், கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர்.
 
இந்த மோசடி வழக்கு, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், நீதிபதி ராஜவேலு முன்னிலையில் சாட்சி விசாரணை புதனன்று நடைபெற்றது. இதையொட்டி கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் நேரில் ஆஜரானார்.
 
ஆனால், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி இருவரும் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அந்நாளில் பிஜூ ராதாகிருஷ்ணன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதன்பின் நீதிமன்றம் விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறிய சரிதா நாயர், ”கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் முஹம்மது ஆகியோரின் உதவியாளர்களிடம் ரூ.1 கோடியே 90 லட்சம் லஞ்சம் கொடுத்தேன்.
 
இந்த பணத்தை என் நிலை கருதி விரைவில் திருப்பி தந்து விடுவார்கள் எனக்கருதி, 2 ஆண்டுகளாக முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரை சேலார் பேனல் மோசடி வழக்கில் வெளியிடாமல் இருந்தேன்.
 
ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்னாள் மற்றும் தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., க்கள் என்னுடன் பேசிய ஆடியோ சிடிகளை வெளியிட உள்ளேன்.
 
சோலார் பேனல் மோசடி தொடர்பான சிடி, பென் ட்ரைவ் உட்பட டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் மோசடியில் தொடர்புடையவர்களின் பெயர் பட்டியல் ஆகியவற்றை கொச்சின் சோலார் மோசடி நீதிவிசாரணை ஆணையத்திடம் வியாழக்கிழமை ஒப்படைப்பேன்.
 
எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. கூடுதல் காவல்துறை பாதுகாப்பு அளித்தால், மேலும், பல திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிடுவேன்.
 
உம்மன் சாண்டியுடன் நான் இருப்பது போன்ற ஆபாச வீடியோ பொய்யானது. என்னை மது ஆலை உரிமையாளர்கள் பின்னிருந்து இயக்குகின்றனர் என உம்மன்சாண்டி கூறுவது தவறு. என்னை யாரும் இயக்கவில்லை” என்றார்.