மனைவியை வெட்டிக் கொலை – தலையோடு சாலையில் நடந்து சென்ற கணவன் !
Last Modified செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (10:21 IST)
ஆந்திராவில் குழந்தையின்மைக் காரணமாக விவாகரத்து பெற இருந்த தம்பதிகளில் கணவன் மனைவியைக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் பிரபுகுமார். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அங்கே பணிபுரிந்த கிரண்டி எனும் பெண்ணை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். தம்பதிகளுக்கு 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இருவரும் மனவருத்தத்தில் இருந்துள்ளனர்.
இதையடுத்து குழந்தைக்காக இருவரும் அடிக்கடி பல மருத்துவர்களிடம் சென்று பரிசோதனைகள் செய்து வந்துள்ளனர். இது சம்மந்தமாக இருவருக்கும் இடையில் இருந்த விரிசல் பெரியதாகி அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார் கிரண்டி. விவாகரத்து விசாரணைக் காலம் இன்னும் முடியாததால் இருவரும் ஒன்றாகவே வசிக்க, அப்போது பிரபு கிரண்டியை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். இதனால் கிரண்டி, போலிஸில் புகாரளிக்க பிரபு கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த அவர் நேற்று முன் தினம் தனது மனைவியின் வீட்டுக்கு சென்று அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன் பின் வெட்டப்பட்ட கிரண்டியின் தலையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்த கால்வாய் ஒன்றில் தலையை வீசிவிட்டு போலிஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.