1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (19:01 IST)

சாலையோரவாசிகள் மீது கார் ஏற்றிய வழக்கு: ”நான் குடிக்கவும் இல்லை; கார் ஓட்டவும் இல்லை” - சல்மான் கான் வாக்குமூலம்

சாலையோரவாசிகள் மீது கார் ஏற்றிய வழக்கில் இன்று வாக்குமூலம் அளித்த நடிகர் சல்மான் கான், சம்பவம் நடந்த அன்று நான் பாரில் மது குடிக்கவும் இல்லை; காரை ஓட்டவும் இல்லை. என் ஓட்டுனர்தான் காரை ஓட்டினார் என்று கூறியுள்ளார்.
இந்தி நடிகர் சல்மான் கான் 2002ஆம் ஆண்டில் பாந்திரா பகுதியில் காரை வேகமாக ஓட்டி சென்றதில் சாலையோரம் படுத்து தூங்கியவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சாதாரண விபத்து வழக்கு பதிவு செய்தனர். வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், இது கொலை அல்லாத மரணத்தை விளைவிக்க கூடிய தீவிரமான குற்றம் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கருதியது. இதனால் கடந்த ஆண்டு இந்த வழக்கு மும்பை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க கூடிய பிரிவுகளில் சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் சல்மான் கான் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். சுமார் 3 மணி நேரம் நீதிமன்றத்தில் சல்மான் கான் வாக்குமூலம் அளித்தார்.  அப்போது நீதிபதி அவரிடம்  400க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டார். அதற்கு பதில் அளித்த சல்மான் கான், மதுபானம் அருந்த பெர்மிட் தேவை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் மது அருந்தவில்லை. விபத்து நடக்கும் போது நான் காரை ஓட்டவும் இல்லை. எனது ஓட்டுனர் அசோக் சிங் தான் காரை ஓட்டினார் என்றார். மேலும், தன் மீது நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் தவறானது என்று சல்மான் கான் கூறினார்.