வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 8 ஜூலை 2014 (21:34 IST)

ரயில்வே பட்ஜெட் 2014-15: முக்கிய அம்சங்கள்

2014-15ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, 2014 ஜூலை 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். பயணிகளுக்கு கூடுதல் வசதி, பாதுகாப்பு நடவடிக்கைகள், திட்டங்களைக் குறித்த காலத்தில் நிறைவு செய்தல், நிதி செயல்பாட்டில் ஒழுங்குமுறை ஆகியவை 2014-15ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாகும். 

அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* ரயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை
 
* நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு முன்னுரிமை
 
* திட்டச் செயல்பாட்டில் சரியான நடைமுறை
 
* அகமதாபாத் - மும்பை பாதையில் புல்லட் ரயில் சேவை
 
* 9 பாதைகளில் ரயில்களின் வேகம் அதிகரிப்பு
 
* பயணிகளின் வசதிகள், சுற்றுப்புறத் தூய்மை, ரயில் நிலையங்களைத் திறம்பட நிர்வகித்தல் போன்றவற்றிற்கு அதிக கவனம்
 
* பயணிகளின் மேம்பட்ட பாதுகாப்பிற்கும் பத்திரத்திற்கும் பல்நோக்கு அணுகுமுறை ; 4000 மகளிர் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் நியமனம்
 
* ரயில்வே முன்பதிவு அமைப்பை மேம்படுத்தித் திருத்தி அமைத்தல்
 
* மின்னணு ரயில்வே முன்பதிவில் மேம்பாடு

* பெரிய ரயில் நிலையங்களிலும் முக்கிய ரயில்களிலும் வை-ஃபை சேவை

* பயணிகளைச் செல்பேசி வழியாக எழுப்ப வசதி

* 58 புதிய ரயில் சேவை அறிமுகம்; 

* 11 தடங்களில் சேவை நீடிப்பு

* ரயில்வே பல்கலைக்கழகம்

* ரயில்வே துறைக்கு உயர் அளவில் பொருட்களை வாங்கும்போது வெளிப்படைத்தன்மையைப் பராமரிப்பதும் மின்னணுக் கொள்முதலும் கட்டாயம் ஆக்கப்படும்

* சரக்குப் பெட்டிகளை கணினி வழியாக முன்பதிவு செய்தல்

* உயர் அளவிலான திட்ட ஒதுக்கீடு; 65455 கோடி திட்ட ஒதுக்கீடு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி
 

* ரயில்வே பணிகளில் கடந்த சில ஆண்டுகளாகக் காணப்பட்டு வரும் நிர்வாகச் சீர்கேடு புறக்கணிப்பு, மக்களைத் திருப்தி செய்வதற்காக செய்யப்பட்ட அறிவிப்புகள், நிதிப் பற்றாக்குறைப் போன்றவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை இந்த பட்ஜெட் கவனத்தில் கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காகக் கட்டமைப்பில் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிதி, அன்னிய நேரடி முதலீடு, தனியார் பொதுத்துறை பங்களிப்பு போன்றவற்றின் வாயிலாக நிதி ஆதாரங்கள் திரட்டப்படும்.
 
* ரயில்வே பயணம், பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதை உறுதி செய்வதுடன் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்நோக்கு அணுகுமுறை யோசனையை இந்த பட்ஜெட் தெரிவித்துள்ளது. பயணிகளின் வசதிகளுக்கும் தூய்மைக்கும் ரயில் நிலையங்களின் மேம்பட்ட நிர்வாகத்திற்கும் கூடுதல் கவனம் செலுத்துவதை இந்த பட்ஜெட் உறுதி செய்கிறது. 
 
* எல்லாப் பெரிய ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கான மேம்பாலம், நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
 
* பாதுகாப்பையும் பத்திரத்தையும் உறுதி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கு இந்த பட்ஜெட் வகை செய்கிறது. இருப்பு பாதையில் ஏற்படும் விரிசல் கண்டறிவதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும். 
 
* சாலைகள், இருப்புப் பாதைகளைக் கடக்கும் இடங்களில் பாலங்களைக் கட்டுவதற்கு கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது. 
 
* முக்கிய ரயில் பாதைகளில் செல்லும் ரயில்களிலும் புறநகர் ரயில்களிலும் ரயில் பெட்டிகளின் கதவுகள் தானே மூடித் திறக்கும் வசதி முன்னோடி அடிப்படையில் அறிமுகம் செய்யப்படும். 
 
* மகளிர் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் 4000 மகளிர் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். மகளிருக்கான பெட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். 


 

தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது. மின்னணு டிக்கெட் முன்பதிவு அமைப்பு முறையில் சீரமைக்கப்பட்டு அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். 
 
நடைமேடை டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்களையும் கணினி வழியாக பெறுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். 
 
பயணிகள் ரயில்கள் மற்றும் பெட்டகங்களின் போக்குவரத்து நிலைமையைத் தெரிந்துகொள்வதற்கும் வசதி ஏற்படுத்தப்படும். 
 
பயணிகளை செல் தொலைபேசி மூலம் எழுப்புவதற்கும் சேருமிடம் பற்றிய தகவல்களை அளிப்பதற்கும் வசதிகள் செய்யப்படும். 
 
ஏ-1 மற்றும் ஏ பிரிவு ரயில் நிலையங்களிலும் முக்கிய ரயில் நிலையங்களிலும் வை-ஃபை சேவை ஏற்படுத்தப்படும். 
 
அடுத்த 5 ஆண்டுகளில் காகித பயன்பாடு இல்லாத நிர்வாகமாக ரயில்வேயை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
 
ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப மற்றும் பிற பிரிவு ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் ரயில்வே பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கும் யோசனை இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கும் யோசனைகளை மேம்படுத்துவதற்கும் அறிமுகப்படுத்துவதற்கும் மையம் ஒன்று ஏற்படுத்தப்படும். 
 
ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்தும் நடவடிக்கையாக மும்பை அகமதாபாத் பாதையில் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், 9 வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை 160 முதல் 200 கி.மீ வரை அதிகரிக்கவும் யோசனை கூறப்பட்டுள்ளது. 

 

* நாட்டின் முக்கிய பெரு நகரங்களையும் வளர்ச்சி மையங்களையும் உயர் வேக ரயில் மூலம் இணைக்க வகை செய்யும் வைர நாற்கர கட்டமைப்பு ஏற்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. 
 
* கண்டறியப்பட்ட சில ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்படும். புதிதாக உருவாக்கப்பட்ட விமான நிலையங்களில் உள்ள நவீன வசதிகள் இந்த ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்படும். இதற்கு பொதுத்துறை தனியார் ஒத்துழைப்பு பெறப்படும். 
 
* ரயில் நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் மேற்பரப்பு, நிலப்பரப்பு ஆகியவை சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் பெற உபயோகப்படுத்தப்படும். 
 
* சரக்கு பெட்டிகள் மற்றும் பெட்டககங்களை தனியார் பெறுவதற்கும், சேமிப்பு கழக ஒத்துழைப்புடன் காய்கறி மற்றும் பழங்களின் போக்குவரத்தை அதிகரிப்பதற்கும் தனியார் பொதுத் துறை பங்களிப்புடன் சரக்கு முனையங்களை ஏற்படுத்தவும் யோசனைகளும் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
* திட்ட நிர்வாகத்திலும் செயல்பாட்டிலும் அதிக அளவு வெளிப்படைத்தன்மை ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இப்பொழுது செயல்பாட்டிலுள்ள திட்டங்களின் விவரங்களைக் கணினி வழியாக தெரிந்துகொள்ள இயலும். 
 
* உயர் அளவிலான கொள்முதல் மேற்கொள்ளப்படும் போது மின்னணு வழி முறை பயன்படுத்தப்படுவது கட்டாயப்படுத்தப்படும். 
 
* சரக்கு வேகன்களைப் பெறுவதற்கு கணினி வழியாகப் பதிவு செய்யும் திட்டம் இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யப்படும். 
 
* புறநகர் மற்றும் பெருநகர் ரயில் சேவைகளில் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொள்வதற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது. மும்பையில் அடுத்த 2 ஆண்டுகளில் 864 கூடுதல் நவீன மின்சார ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும். பங்களுரில் ரயில் போக்குவரத்து கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.


 

* அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் வைக்கப்படும்.
 
* அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் உணவுக் கூடங்கள் அமைத்துத் தரப்படும்.
 
* ரயில்களில் உணவு குறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதைத் தடுக்க, மிகவும் பிரபலமான சமைத்து தயாராக இருக்கும் உணவுகள் ரயிலில் அறிமுகப்படுத்தப்படும்.
 
* மகளிருக்கான ரயில் பெட்டிகளில் பெண் காவலர்களுக்கு செல்போன் வழங்கப்படும்.
 
* அனைத்து ரயில் நிலையங்களிலும் குடிநீர் & கழிவறை வசதிகள் மேம்படுத்தப்படும். 
 
* முக்கிய ரயில் நிலையங்களில் தனியார் உதவியுடன் லிப்ட் அமைக்கப்படும்.
 
* மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டம் அறிமுகம். மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில், இந்த இரு நகரங்களுக்கு இடையில் உள்ள 534 கி.மீ. தொலைவை இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.
 
* ரயில் நிலையங்களில் தூய்மை நடவடிக்கைகளைக் கண்காணிக்க, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

* ஆளில்லா ரயில்வே கிராசிங்கால் ஏற்படும் ரயில் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு 5400 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் நீக்கப்படும்.
 
* ரயில்வே நிலையங்களில் பொது மக்கள் சுகாதாரமான முறையில் நடந்துகொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பயணச் சீட்டின் பின்புறம், குறிப்புகள் அச்சிடப்படும்.
 
* அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வறைகள் உருவாக்கப்படும். 
 
* ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் ஆகியவற்றில் மனிதக் கழிவுகளால் ஏற்படும் சுகாதாரக் கேடு தவிர்க்கப்படும். 

 

* சுகாதாரமற்ற உணவுப் பண்டங்களை ரயில்களில் விற்கும் காண்ட்ராக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
 
* மூத்த குடிமக்களுக்கு வசதியாக, ரயில் நிலையங்களில் உள்ளே செல்வதற்கு பேட்டரி கார் வசதி வழங்கப்படும் 
 
* அஞ்சல் நிலையங்கள் மற்றும் செல்போன்கள் மூலமான ரயில்வே டிக்கெட் புக்கிங் பிரபலப்படுத்தப்படும்.
 
* சுவாமி விவேகானந்தரின் வாழ்வையும் பணிகளையும் விளக்கும் சிறப்பு ரயில் விடப்படும்.

* கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய ரயில்வே 3,700 கி.மீ தண்டவாளங்கள் அமைக்க ரூ.41,000 கோடி செலவு செய்துள்ளது.
 
* ரயில்வே பட்ஜெட்டின் பெரும்பாலான செலவீடு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களுக்கு செலவிடப்படும்.
 
* தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் 29 ரயில் திட்டங்கள் உள்ளன. அவை ரூ.20,680 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.
 
* பொருள்களைக் கொண்டு செல்லும் சேவை, இணையத்தளம் வழியாக வணிகம் மேற்கொள்ளும் மேலும் பல நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
 
* ரயில்வே நிலங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்தி, புவியியல் தரவாக்க முறையின் மூலம் (gis mapping) குறியீடு உருவாக்கப்படும்.
 
* இந்திய ரயில்வே துறை, அடுத்த 5 ஆண்டுகளில் காகிதமில்லா அலுவலகங்களாக, மின்னணு முறைக்கு மேம்படுத்தப்படும்.
 
* பாதுகாப்புக் கருதி, முக்கிய ரயில்களிலும் புறநகர் ரயில்களிலும் தானாகத் திறந்து மூடும் கதவுகள் அமைக்கப்படும்.


* பயோ-டீசல் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு, குடிநீர் ஆகியவற்றுடன் சுத்தமான சூழலை உறுதி செய்ய 40 சதவீத அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
 
* ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்குச் சுத்தமான போர்வைகள், படுக்கை வசதிகளை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
* பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஒ தண்ணீர் அளிக்கப்படும்.
 
* ரயில் வழங்கப்பட்ட உணவின் தரத்தைக் குறித்து அறிய 'இண்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ்' (IVRS) முறை பயன்படுத்தப்படும்.
 
* முக்கிய ரயில் நிலையங்களில் துரித உணவகங்கள் திறக்கப்படும்.
 
* பயணிகள் அவர்களது உணவை எஸ்.எம்.எஸ் மூலமாகவோ அல்லது மொபைல் மூலமாகவோ ஆர்டர் செய்யலாம்.
 
* ரயில்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை பத்திரமாகக் கொண்டு செல்ல தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்படும்.

* ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பாடங்கள் கற்பிக்கப்படும். இதற்காகத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
 
* பொறியியல், மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்குப் படிப்பின் ஒரு பகுதியாக பணி அனுபவம் ( Summer internships) வழங்கப்படும்.
 
* புதிய கண்டுபிடிப்புக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும்.


* 2014-15ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 58 புதிய ரயில் சேவையை அறிமுகம் செய்யும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன. 

* புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 58 ரயில்களில் 5 ஜன்சதாரன் ரயில்கள், 5 பிரீமியம் ரயில்கள், 6 குளிரூட்டப்பட்ட ரயில்கள், 27 விரைவு ரயில்கள், 8 பயணியர் ரயில்கள், 7 புறநகர் ரயில்கள் (5 DEMU & 2 MEMU) அடங்கும். 11 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
* புதிய ரயில் பாதைகள், இரட்டை வழிகள் பாதைகள், அகலப் பாதைப் பணிகள் ஆகியவற்றிற்காக 28 ஆய்வுகளை மேற்கொள்ள இந்த பட்ஜெட் வகை செய்கிறது. 
 
* வடகிழக்கு மற்றும் தொலை தூர பகுதிகளில் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
* கண்டறியப்பட்டுள்ள புனித யாத்திரை தலங்களுக்கான சிறப்பு பயணத் திட்டம், 2 சுற்றுலா ரயில்கள் ஆகியவற்றிற்கும் இந்த பட்ஜெட்டில் வகை செய்யப்பட்டுள்ளது. 
 
* இந்த பட்ஜெட்டின் மதிப்பீட்டின்படி ரயில்வேயின் வருவாய் ரூ.1,64,374 கோடியாக இருக்கும். செலவீனம் ரூ. 1,49,176 கோடியாகும். ரயில்வேயை இயக்குவதற்கான செலவு விகிதம் 92.5 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2013-14ஆம் ஆண்டை விட ஒரு சதவிதம் மேம்பட்டதாகும்.