புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி..! பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு..!!
புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதாக முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அதன்படி, நாடு முழுவதும் சுட்டெரித்து வரும் வெப்ப அலை குறித்தும், ரேமல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
மிசோரம், அசாம், மணிப்பூர் மற்றும் மேகலாயா மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்தார். ஆலோசனையில் வட கிழக்கு மாநிலங்களில் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும், மறுசீரமைப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.