வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (09:18 IST)

கொரோனா உள்ள இடத்தை அடைச்சிடுங்க! – அதிகாரி சொன்னதை தப்பாய் செய்த ஊழியர்கள்!

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வர முடியாத படி வீடுகளை சீட் போட்டு அடைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. முக்கியமாக கொரோனா தொற்று இருப்பதாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே செல்லவே கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெங்களூரில் பெண் ஒருவருக்கும், அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல வயதான தம்பதிகள் இருவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள் அவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி கதவின் முன்னால் தகர சீட்டுகளை வைத்து அடைத்துள்ளனர். இதனால் அந்த வீட்டில் உள்ளோர் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் வீட்டிற்குள் ஒரு ஆபத்து என்றால் அவர்களால் எப்படி வெளியேற முடியும் என பலரும் கேள்வி எழுப்பினர். இது வைரலான நிலையில் உடனடியாக அந்த வீடுகளில் அமைக்கப்பட்ட தகரங்கள் நீக்கப்பட்டன.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்த பகுதியின் பொறுப்பு அதிகாரியான டி பசவராஜூ கூறுகையில் “ஏன் இப்படி செய்தார்கள் என தெரியவில்லை. கீழ்நிலை அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டு தகரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. தடைசெய்யப்பட்ட தெருக்களின் பாதைகளைதான் தகரத்தால் அடைக்க சொன்னோம். தனியாக வீடுகளை அடைக்க சொல்லவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.