1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 29 அக்டோபர் 2014 (11:04 IST)

ஹரியானாவில் 125 அடி நீளமுடைய சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை

ஹரியானா மாநிலம், சோனேபட் மாவட்டத்தின் கோஹனா நகரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை கட்டடத்தின் அடியில் 125 அடி தொலைவுக்கு சுரங்கம் அமைத்து நகைகள், ரொக்கப் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
 
இந்தக் கொள்ளைக்காக வங்கியின் எதிர்புறம் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடத்தில் இருந்து 2.5 அடி அகலமும், 125 அடி நீளமும் கொண்ட சுரங்கத்தை கொள்ளையர்கள் தோண்டியுள்ளனர்.
 
வங்கியின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 90 பணப்பெட்டகங்களை உடைத்து அதிலிருந்த ரூ.40 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த நகைகள், மதிப்பு வாய்ந்த ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
 
இந்தக் கொள்ளை, வங்கியின் விடுமுறை நாட்களான சனிக்கிழமை பிற்பகல் முதல் திங்கள்கிழமை காலை வரையிலான கால இடைவெளியில் நடைபெற்றிருக்கலாம் என்று காவல் துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.
 
வங்கி மேலாளரான தேவிந்தர் மாலிக் திங்கட்கிழமை காலையில் வந்து வங்கியைத் திறந்த பிறகே அங்கு கொள்ளை நடத்திருப்பது தெரியவந்தது.
 
அந்த வங்கியின் 2 அறைகளில் கொள்ளையர்கள் தோண்டிய சுரங்கத்தின் மண் கொட்டப்பட்டிருந்ததாகவும், இந்தக் கொள்ளைச் சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க, வங்கியின் அனைத்து ஜன்னல் கதவுகளையும் கொள்ளையர்கள் மூடியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். 
 
இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், கொள்ளையர்களைப் பிடிக்க சிறப்புக் குழுவையும் காவல் துறையினர் அமைத்துள்ளனர்.
 
இது குறித்து மாநில காவல் துறை தலைவர் அனில் குமார் கூறுகையில், “கொள்ளையர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். மேலும், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொள்ளையர்களைத் தேடும் விதமாக சிறப்பு காவல் துறையினரின் குழுவினரையும் அனுப்பியுள்ளோம்.
 
வங்கியில் பணப்பெட்டக பகுதியில் சிசிடிவி கேமிரா இல்லாததால், கொள்ளையர்கள் குறித்து அடையளம் தெரியவில்லை“ என்றார் அவர்.
 
இது குறித்து சோனேபட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் நெஹ்ரா கூறுகையில், "வங்கியிலுள்ள 350 பணப் பெட்டகங்களில் 90 பெட்டகங்களில் இருந்த பணம், நகைகளை கொள்ளையர்கள் முழுவதுமாக அள்ளிச் சென்றுள்ளனர். 
 
பணப்பெட்டகங்கள் இருந்த அறை சாதாரண சிமென்ட்டால் அமைக்கப்பட்டிருந்ததால், அதை சுலபமாக கொள்ளையர்கள் துளையிட்டுள்ளனர். இந்த அறையை அமைத்ததில் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகள் பின்பற்றப்பட வில்லை“ என்று தெரிவித்துள்ளார்.
 
வங்கியின் மேலாளர் தேவிந்தர் மாலிக் கூறுகையில், “பணப்பெட்டக அறை ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளுக்கு உள்பட்டே அமைக்கப்பட்டுள்ளது.
 
வங்கியை பல நாள்களாக கண்காணித்து, நுட்பமாகத் திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கிளையில் 35,000 பேர் கணக்கு வைத்துள்ளனர். அவர்களது சேமிப்புக்களின் மதிப்பு ரூ.125 கோடி“ என்று கூறியுள்ளார்.