வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (15:30 IST)

பீடா கடைக்காரருக்கு ரூ.132 கோடி மின் கட்டணம்!

ஹரியானாவில் பீடா கடை வைத்திருப்பவருக்கு ரூ.132 கோடி மின் கட்டணம் வந்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
ஹரியானாவின் சொனிபெட் மாவட்டத்தில் பீடா கடை வைத்திருப்பவர் ராஜேஷ். இவருக்கு தீபாவளி அன்று உத்தர் ஹரியானா பிஜ்லி வித்ரான் நிகாமிடமிருந்து மின்சார கட்டணத்திற்கான நோட்டீஸ் வந்தது. அக்டோபர் மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்த அனுப்பப்பட்ட அந்த நோட்டீசில், இவரது சிறிய கடையின் மின் கட்டணம் ரூ. 132.29 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அவர் இதுகுறித்து கூறுகையில், நான் ஒரு சாதாரண மனிதன். ஒரு சிறிய பீடா கடையை மட்டுமே நடத்தி வருகிறேன், எனது கடையில் ஒரு சிறிய பல்பு மற்றும் மின்விசிறி மட்டும் தான் உள்ளது. பொதுவாக என் கடைக்கு ரூ. 1000க்கும் குறைவாகத்தான் மின் கட்டணம் வரும். இப்படி ரூ. 132 கோடி கட்டணம் வந்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. பில்லில் கூறப்பட்ட தொகை எண்கள் மற்றும் எழுத்திலும் தெளிவாக எழுதப்பட்டிருந்தது என கூறினார். 
 
மேலும், இந்த தவறைச் சரி செய்ய மின்சார வாரியத்திற்கு செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டில் ஏற்கனவே ஹரியானா மின்சார துறை நர்னவுல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ரூ. 234 கோடியை மின்சார கட்டணமாக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.