வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:38 IST)

பணிந்தது மத்திய அரசு - கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து இல்லையாம்....

சமையல் சிலிண்டருக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை ரத்து செய்யப்படாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


 

 
மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பின் பல அதிரடியான திட்டங்களை அறிமுகம் செய்தது. புதிய ரூபாய் நோட்டுகள், ஆதார் அட்டை கட்டாயம், மாட்டிறைச்சி, ஜி.எஸ்.டி என பல சட்ட, திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. 
 
இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டருக்கான மானியத்தை வருகிற 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியோடு ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது. மேலும், மாதந்தோறும் ரூ.4 என்ற அளவுக்கு சிலிண்டரின் விலையை உயர்த்தவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
சிலிண்டருக்கான மானியத் தொகை, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த செய்தி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அமளியிலும் ஈடுபட்டனர். அப்போது விளக்கம் அளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் “சமையல் எரியாவு சிலிண்டருக்கான மானியத் தொகை ரத்து செய்யப்படாது. மானியம் முறைப்படுத்தப்படும்” என பதிலளித்தார். 
 
ஆனால், முறைப்படுத்துதல் என்றால் என்ன எனவும், மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றி தெளிவாக ஏதும் அவர் குறிப்பிடவில்லை.