துப்பாக்கி முனையில் காதலனை கடத்தி திருமணம் செய்த ரிவால்வர் ராணி..


Murugan| Last Updated: செவ்வாய், 11 ஜூலை 2017 (12:11 IST)
திருமண மேடையில் இருந்த தனது காதலனை துப்பாக்கி முனையில் கடத்தி, அவரையே ஒரு பெண் திருமணம் செய்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பண்டல் கண்ட் பகுதியில் வசிப்பவர் அசோக் யாதவ். இவர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் வர்ஷாசாகு என்ற பெண்ணும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 
 
அந்நிலையில், அசோக் யாதவின் பெற்றோர்கள், அவருக்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயித்தனர். இந்த திருமணத்தில் அசோக்கிற்கு விருப்பமில்லை என்றாலும், பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் இந்த திருமணத்திற்கு அவர் சம்மதித்ததாக தெரிகிறது. அந்த திருமணம் கடந்த மே மாதம் 15ம் தேதி நடைபெற்றது. 
 
மணப்பெண்ணிற்கு அசோக்  தாலி கட்ட தயாரான போது, அங்கு கையில் துப்பாக்கியுடன் நுழைந்த அவரின் காதலி வர்ஷாசாகு, அசோக்கை அங்கிருந்து கடத்தி சென்றார். எனவே, இவர்களின் காதல் விவகாரம் மணப்பெண்ணின் தந்தைக்கு தெரியவர, அவர் அசோக்கின் மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை யாரும் ஜாமீனுக்கு எடுக்க முன்வராத சூழ்நிலையில், வர்ஷாசாகுவே, அவரை ஜாமீனில் எடுத்து, உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் திருமணமும் செய்து கொண்டார். 
 
துப்பாக்கி காட்டி மிரட்டி அசோக்கை திருமணம் செய்த வர்ஷாவை, அந்த பகுதி மக்கள் ரிவால்வர் ராணி என அழைத்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :