அறுவைச் சிகிச்சை செய்த சிறுவன் ’கோமா’ - மருத்துவமனை மீது நடவடிக்கை
பெங்களூருவில் அறுவைச் சிகிச்சை செய்த 5 வயது சிறுவன் ’கோமா’ நிலையை அடைந்ததை அடுத்து, அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் 5 வயது குழந்தை லக்சய்க்கு கைவிரல்களில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட லக்சய் எதிர்பாராத விதமாக கோமா நிலைக்குச் சென்றுவிட்டான். அவன் தற்போது மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்து சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இது குறித்து கூறியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் யுடி காதர் “இந்த விஷயம் குறித்து உரிய விளக்கம் அளிக்கக் கூறி மல்லையா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
சிகிச்சையின் போது தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய நஷ்டஈடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ”அவனுக்கு இதயத்திலும் நுரையீரலிலும் கோளாறு இருந்ததே கோமா நிலைக்கு சென்றதற்கு காரணம்” என்று மருத்துவமனை தரப்பு தெரிவித்ததாக சிறுவனின் தந்தை புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.