புளூகேம் விளையாட்டுக்கு அடிமையான பெண் வங்கி ஊழியர்: புதுவையில் பரபரப்பு
ஆளைக்கொல்லும் ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டினால் இந்தியா உள்பட உலகில் பல உயிர்கள் இழந்து கொண்டிருக்கும் நிலையில் புதுவையில் புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியர் ஒருவரை மீட்டு அவருக்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர்.
புதுவையில் ப்ரியா என்ற 23 வயது பெண் வங்கி ஊழியர் புளூவேல் விளையாட்டிற்கு அடிமையாக மனச்சோர்வுடன் இருப்பதாக அவரது தோழி புதுவை போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து ப்ரியாவின் வீட்டுக்கு போலீசார் சென்ற போது அவரை காணவில்லை.
இதுகுறித்து ப்ரியாவின் பெற்றோரிடம் விசாரணை செய்தபோது நள்ளிரவு முழுவதும் பிரியா விழித்து இருந்ததாகவும், காலை முதல் பிரியாவை காணவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் மேலும் கடந்த சில நாட்களாக பிரியா எப்போதும் செல்போனில் மூழ்கியபடியே இருப்பதாகவும், எந்த நேரமும் டென்ஷனாகவே அவர் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் ப்ரியாவை கடற்கரை அருகே கண்டுபிடித்து அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். சிலமணி நேரம் தாமதம் செய்திருந்தாலும் ப்ரியாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.