திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (21:40 IST)

36 நாட்கள் நடந்தும் விவசாயிகள் போராட்டம் கண்டுகொள்ளப்படாதது ஏன்?

தலைநகர் டெல்லியில் கடந்த 36 நாட்களாக நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பிசுபிசுத்து வருவதால் போராட்டத்தை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து அய்யாக்கண்ணு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


விவசாய கடன் தள்ளுபடி , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசுக்கு உணரும் வகையில் போராட்டம் நடத்தாமல் தினமும் ஒருவகை வித்தியாசமான போராட்டம் என்ற பெயரில் அடித்த கூத்தாகவே டெல்லியில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

பிரதமர் தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கை வைத்துவிட்டு பிரதமர் போன்று வேஷம் அணிந்து சாட்டையால் அடிக்கும் போராட்டத்தை மத்திய அரசு ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் இந்த போராட்டத்தை மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு, தமிழக எம்பிக்கள் கொண்டு செல்ல தவறிவிட்டதாலும் முக்கியத்துவம் பெறவில்லை.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் பரபரப்புகளே அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வருவதால் விவசாயிகள் போராட்டத்தை ஊடகங்களும் சில நாட்களாக கண்டுகொள்ளவில்லை. மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் இந்த போராட்டத்தை பெரிய அளவில் சீரியஸாக எடுத்து கொள்ளாததால் விரைவில் போராட்டம் தோல்வியில் முடியும் என்றே கருதப்படுகிறது.