1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2017 (12:38 IST)

சிறுநீர் குடிப்போம்; மலம் உண்ணுவோம்: எச்சரிக்கும் விவசாயிகள்!

சிறுநீர் குடிப்போம்; மலம் உண்ணுவோம்: எச்சரிக்கும் விவசாயிகள்!

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதியை அடுத்து இரண்டு நாட்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.


 
 
இதனையடுத்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் நாளை சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்துவோம் எனவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளையும் வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக தராவிட்டால் மலம் உண்ணும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளனர்.
 
தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதி கூடுதலாக ஒதுக்க வேண்டும், தேசிய வங்கிகளில் வாங்கியிருக்கும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிருத்தி அவர்கள் போராடி வருகின்றனர்.
 
தினமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கடந்த 19-ஆம் தேதி சந்தித்து பேசுவார்த்தை நடத்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார்.
 
இதனையடுத்து இரண்டு நாட்கள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர் விவசாயிகள். இந்நிலையில் டெல்லி காவல்துறை விவசாயிகள் தங்கியிருந்த இடத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்களை அகற்ற முயற்சித்தனர். இதனை போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும் போராட்டக்குழு தலைவர் அய்யக்கண்ணு கடுமையாக கண்டித்துள்ளார்.
 
இதுகுறித்து பேசிய அய்யக்கண்ணு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் நாளை சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். அதற்காக இன்றே சிறுநீரை பாட்டிலில் பிடித்து போராட்டக்களத்தில் பார்வைக்கு வைத்துளனர். மேலும் நாளையும் அளித்த வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக தராவிட்டால், மலம் உண்ணும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளார்.