சசிகலா விவகாரம்; சிசிடிவி ஆதாரங்கள் அழிப்பு? - அக்ரஹார சிறையில் அடாவடி


Murugan| Last Updated: சனி, 15 ஜூலை 2017 (12:40 IST)
சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், அவருக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை சிறை அதிகாரிகள் ஏற்கனவே அழித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா நேற்று பரபரப்பு புகார் அளித்தார்.  
 
இதனையடுத்து, இதுபற்றி விசாரணை செய்ய கர்நாடக உள்துறை முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரி வினய்குமார் தலைமயில் ஒரு குழுவை அந்த மாநில முதலமைச்சர் சித்தராமய்யா நியமித்தார்.  மேலும், இந்த விசாரணை குறித்த முதல் கட்ட அறிக்கையை, அடுத்த வாரமே வினய்குமார் தாக்கல் செய்வார் எனவும் முழு விசாரணை ஒரு மாதத்திற்குள் அவர் தாக்கல் செய்வார் எனவும் சித்தராமய்யா அறிவித்துள்ளார். அடுத்த வாரம் இந்த அறிக்கை வெளியாகும் என கூறப்பட்டதால், சசிகலாவிற்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
 


 
மேலும், விசாரணைக்குழுவில் திறமை வாய்ந்த மூத்த போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்துசென்று, சசிகலா, இளவரசி, திவாகரன், சிறை அதிகாரிகள், சிறைத்துறை டிஐஜி ரூபா, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா உள்ளிட்ட சில அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. முக்கியமாக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதா? அது உண்மையெனில் அந்த பணம் எப்படி கை மாறியது என அவர்கள் விசாரணை நடத்தவுள்ளனர். மேலும், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம், விதிமுறைகளை மீறி எத்தனை பேர் சசிகலாவை சந்தித்து பேசினர் என்கிற விபரங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு நடத்தவுள்ளனர்.
 

 
இந்நிலையில், விசாரணைக்குழு சிறைக்கு வருவதற்கு முன்பே முக்கிய ஆதாரங்கள அனைத்தையும் அழிக்கும் முயற்சியில் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முக்கியமாக, சிறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.


 

 
அந்த சிறையில், சசிகலா உட்பட பல விஐபி கைதிகளுக்கு என தனியாக செயல்பட்டு வந்த சமையல் கூடத்தையும் இடித்து விட்டனராம். இது தவிர, சசிகலாவை சிறை உடை அணிய வைத்து, ஒரு சாதாரண கைதி போல் காட்டும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 
 
ஆனால், இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்த டிஐஜி ரூபா, சிறையில் நடந்த விதிமீறல்களை கேமரா மூலம் வீடியோ எடுத்து வைத்துள்ளார் எனவும், இதிலிருந்து சசிகலா உட்பட பல அதிகாரிகள் தப்ப முடியாது எனவும் கூறப்படுகிறது. அப்படி விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சசிகலா மீது நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிகிறது. 
 
இந்த விவகாரம், சசிகலா தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :