வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : புதன், 9 ஜூலை 2014 (18:43 IST)

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.4% முதல் 5.9% வரை இருக்கும் - பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

2014-15ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.4 சதவிகிதத்திலிருந்து 5.9 சதவிகிதமாக இருக்கும். நடப்புக் கணக்கிலும் நிதிப் பற்றாக்குறையிலும் ஏற்படும் மேம்பாடுகள் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். 2013-14 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி சாதனை அளவை எட்டும் எனப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
 
2014 ஜூலை 9 அன்று நாடாளுமன்ற மக்களவையில் 2014-15ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்தார். பணவீக்கத்தில் ஏற்படும் நிதானப் போக்கு நிதிக் கொள்கையை எளிமைப்படுத்தவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வழிவகுக்கும் என்றும் இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. உலக பொருளாதார நிலைமை, குறிப்பாகச் சில வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 2014-15இலும் வரும் ஆண்டுகளிலும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
 
இந்த அறிக்கை மேலும் கூறுவதாவது:
 
வலுவிழந்த பருவ மழை, வெளிநாட்டுக் காரணிகள் மற்றும் முதலீட்டுக்குச் சாதகமில்லாத நிலைமை போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சூழ்நிலையில் இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. 2008-09ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் மந்த வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் 2009-10 மற்றும் 2010-11ஆம் ஆண்டுகளில் மீட்சி பெற்றது. எனினும் 2012-13 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 5 சதவிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. 
 
2013-14ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு பிறகு புறக் காரணிகளால் பொருளாதாரத்தில் குறிப்பிடும்படியான மாற்றம் ஏற்பட்டதை இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அந்த ஆண்டின் முடிவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவிதமாக குறைந்தது. இது 2012-13 ஆம் ஆண்டு 4.7 சதவிதமாக இருந்தது. நிதிப் பற்றாக்குறை குறைந்ததையடுத்து நிதி நிலைமையிலும் மேம்பாடு காணப்பட்டது. 
 
சாதகமான பருவ மழை காரணமாக வேளாண்மையிலும் அதைச் சார்ந்த துறைகளும் 2013-14ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 4.7 சதவிகித்தை எட்டியது. உணவு தானிய உற்பத்தி இந்த ஆண்டில் சாதனை அளவாக 264.4 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய 5 ஆண்டுகளின் சராசரி உற்பத்தியைவிட 20 மில்லியன் டன் கூடுதலாகும். தோட்டப் பொருட்களின் உற்பத்தி 2012-13ஆம் ஆண்டு 265 மில்லியன் டன்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

தொழில் துறையில் சுரங்கப் பணிகளை இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து 2013-14ஆம் ஆண்டிலும் குறைவு காணப்பட்டது. உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி வீதம் போதுமானதாக இல்லை. இவை கட்டமைப்பில் உள்ள இடர்பாடுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்தன. சேவைத்துறையிலும் மந்த நிலைமை காணப்பட்டது. எனவே, தொழில்துறையில் ஏற்படும் மீட்ச்சி பொருளாதார நடவடிக்கைகளைத் துரித படுத்துவதற்கு மிக அவசியமாகும். 
 
இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருப்பது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. 2001 ஆம் ஆண்டு 58 சதவிதமாக இருந்த உழைக்கும் வயது மக்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு 64 சதவிதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவை நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தந்தாலும் பெரும் சாவாலையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை, கொள்கை வகுப்பாளர்கள் வரைந்து செயல்படுத்த வேண்டி உள்ளது. இந்த சாதகமான நிலைமை நீண்ட காலத்திற்கு இராது. எனவே, இப்பிரிவினர் நல்ல உடல் நலத்துடன் கல்வி அறிவு மற்றும் திறமை பெற்றவர்களாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தக்க தருணத்தில் எடுக்கப்பட வேண்டும். 
 
முதலீட்டுச் சூழ்நிலையை மேம்படுத்தும் வகையில் வர்த்தக மனோபாவத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2007-08ஆம் ஆண்டு வரை முதலீட்டில் காணப்பட்ட பெரும் வளர்ச்சி தனியார் துறையில் இருந்த கணிசமான அதிகரிப்பே காரணமாகும். தனியார் துறை முதலீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியே முதலீட்டில் ஏற்பட்ட மந்த நிலைக்குக் காரணமாகும். வெளிப் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுவரும் மேம்பாடும் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள குறைவும் நிதி பற்றாக்குறை வீழ்ச்சியும் வர்த்தக மனோபாவம் புத்துயிர் பெற சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. 
 
இந்தச் சூழ்நிலையில் நிதி நிலைமையை வலுப்படுத்துவதுடன், வெளிநாட்டு நிதி நிலைமையை மேம்படுத்துவதும் பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்துவதும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் அவசியமாகும். வரிக் கொள்கையை எளிமைப்படுத்துவதும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்களை மாற்றி அமைப்பதும் வர்த்தகப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதும் வேளாண்மைத் துறையில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் காண்பதும் அவசியமாகும். 
 
அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் வெளிப் பொருளாதார நிலைமை மேம்பட வழி வகுத்துள்ளன. வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சமநிலையைப் பராமரிப்பதும் திறமையை மேம்படுத்துவதும் அவசியமாகும். 
 
இந்தக் குறிக்கோளை எட்ட நிதி நிலையை வலுப்படுத்துதல் கட்டமைப்பில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைதல் போன்ற கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தத் திசையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் 7 முதல் 8 சதவீதம் வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் தான் எட்ட முடிவும். 
 
இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.