வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (16:18 IST)

அருண் ஜெட்லியின் சர்ச்சையான கருத்து - நிர்பயா பெற்றோர் பதில்

டெல்லியில் நடைபெற்ற ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இந்திய சுற்றுலாத்துறையில் பெரும் இழப்பு ஏற்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொன்ன கருத்திற்கு நிர்பயாவின் பெற்றோர் பதில் அளித்துள்ளனர்.
 
கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியா மட்டுமின்றி இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  
 
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ள நிலையில், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவின் சுற்றுலாத்துறை பாதிப்பு அடைகிறது. 
 
டெல்லியில் நடைபெற்ற ஒரு சிறிய பாலியல் வன்கொடுமை சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டு சுற்றுலாத்துறையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார். 
 
மத்திய அமைச்சராக இருக்கும் அருண் ஜெட்லியின் இக்கருத்து சர்ச்சை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் தான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளபட்டதாகவும், தான் தெரிவித்த கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் வருந்துவதாகவும் கூறினார்.   
 
இந்நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள நிர்பயாவின்  தந்தை, 'அருண் ஜெட்லியின் கருத்து  ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் அனுபவித்த  துயரம் தெரியாததால் அரசியல்வாதிகள் இவ்வாறு அடிப்படை இல்லாத தகவல்களை தெரிவிக்கின்றனர். 
 
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்ற உறுதி மொழியோடு தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அவ்வாறு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள்'என்று கூறினார்.
 
இது குறித்து பேசிய நிர்பயாவின் தாய், 'நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்வது நிதி அமைச்சரின் வேலை. இவ்வாறு கருத்து தெரிவிப்பது அவர்கள் வேலை இல்லை. எங்கள் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்' எனக் கூறினார்.