வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (16:31 IST)

சிறுவன் வாயில் கட்டுக்கட்டாக பணத்தை திணித்த சபாநாயகர் – சர்ச்சையை கிளப்பிய வீடியோ

தெலுங்கானாவில் சிறுவன் வாயில் பணக்கட்டை சபாநாயகர் திணிக்கும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தான். மக்கள் சுற்றி நின்று அதை ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா துணை சபாநாயகர் பத்ம ராவ் கௌடாவும் கலந்து கொண்டார்.

சிறுவன் வாசிப்பதை கண்டு பிரமித்து போன பத்ம ராவ் கௌடா அந்த சிறுவனுக்கு பரிசாக பணத்தை கொடுத்திருக்கிறார். அதை கையில் கொடுக்காமல் வாசித்து கொண்டிருந்த சிறுவனின் வாயில் திணித்து அடைத்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தை சேர்ந்த ரேவதி தேவி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். “குழந்தைகளை மரியாதையாக எப்படி நடத்துவது என்பதை நாம் முதலில் கற்று கொள்ள வேண்டும். பரிசு கொடுப்பதாக இருந்தால் அந்த சிறுவன் கையில் மரியாதையாக அளித்திருக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை” என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பத்ம ராவ் கௌடா “கலைஞர்களுக்கு பரிசாக பணத்தை வாயில் திணிப்பது என்பது இங்கு பல காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை. அந்த சிறுவனின் திறமையை பாராட்டியே நான் அதை செய்தேன்” என கூறியுள்ளார்.