வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (12:22 IST)

பாஜக ஆட்சி அமைந்தால் டெல்லிக்கு நல்லது - ஷீலா தீட்சித்

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை இருந்தால் அது டெல்லிக்கு நல்லது, அதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து ஷீலா தீட்சித் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் பதவியில் இருந்து கடந்த மாத இறுதியில் விலகினார். ஆளுநர் பதவியில் இருந்து விலகிய ஷீலா தீட்சித் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா தீட்சித் கூறுகையில், “ஜனநாயகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருப்பது எப்போதும் நல்லதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால்தான், மக்கள் குரல் செவிமடுத்து கேட்கப்படுவது இல்லை.

எனவே, பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தால், அது டெல்லிக்கு நல்லது. அதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால், எப்படி ஆட்சி அமைக்கப்படும் என்பது இதுவரை தெரியவில்லை.

சிறுபான்மை அரசுக்குரிய சவால்கள் என்ன? அவற்றை பாஜகவால் சமாளிக்க முடியுமா? என்பதெல்லாம் பாஜகதான் முடிவு செய்ய வேண்டும்.

அதேசமயம், எந்த கட்சி எம் எல் ஏ வும் புதிதாக தேர்தல் நடத்துவதை விரும்பவில்லை. மக்களும், தேர்தல் நடந்து ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில், புதிதாக தேர்தல் நடத்துவதை விரும்பவில்லை.

பாஜக ஆட்சி அமைத்தாலும், அவர்கள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருக்கும். எனவே, அவர்கள் முதலில் ஆட்சி அமைக்கட்டும். பிறகு முடிவு செய்து கொள்ளலாம்“. என்று அவர் கூறினார்.

ஷீலா தீட்சித் இவ்வாறு கூறியிருப்பது குறித்து டெல்லி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறுகையில், “ஷீலா தீட்சித்தின் அறிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

அது அவரது சொந்த கருத்து. அதற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தம் இல்லை. பாஜகவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதுதான் தொடக்கத்தில் இருந்தே காங்கிரசின் நிலைப்பாடு“ என்று தெரிவித்துள்ளார்.