வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 24 ஜூலை 2014 (09:37 IST)

தண்டனைக் குறைப்பு அதிகாரங்கள்: விசாரணையைத் தொடங்கியது உச்ச நீதிமன்றம்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்வதற்கான அதிகாரம், மாநில அரசுகளுக்கு உள்ளதா என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணையைத் தொடங்கியது.

தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதைக் காரணமாக வைத்து அவர்களின் தண்டனையைக் குறைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இதை அடிப்படையாக வைத்து, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், ஆயுள் தண்டனைக் கைதிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யவும் தமிழக அமைச்சரவை கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் முடிவுக்குத் தடை விதித்து, இந்த வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீது அண்மையில் அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ரிட் மனு விசாரணைக்கு உகந்ததா? என்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணைக்காக 2 நாள் ஒதுக்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் முன்வைத்த வாதம் வருமாறு:-

“இந்த வழக்கில் பல முக்கிய விவகாரங்கள் அடங்கி உள்ளதால், அவசரகதியில் விசாரிக்க இயலாது. அரசியல் சாசன அமர்வுக்கு முன்னர் 7 முக்கியக் கேள்விகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதன் மீது வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் தேவை. தண்டனை பெற்றவர்கள் தங்கள் தண்டனையைக் குறைக்கக் கோரும் உரிமை அவர்களுக்கு உள்ளதா?

தூக்குத் தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகள், தங்களது ஆயுள் காலம் முடியும் வரை சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? அல்லது 14 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு தங்களது தண்டனையைக் குறைக்கக் கோர முடியுமா?

அதேநேரத்தில், தூக்குத் தண்டனையைக் குறைக்க முடிவு மேற்கொள்ளும்போது பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டுமா? அல்லது கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாதா? என்பன போன்ற முக்கிய கேள்விகள் உள்ளன.

மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில், தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்று அனுப்பப்பட்ட நோட்டீஸýக்கு சில மாநில அரசுகள் மட்டுமே பதிலளித்துள்ளன.

பெரும்பாலான மாநில அரசுகளிடம் இருந்து இன்னமும் பதில் வரவில்லை. அதிலும், சில மாநில அரசுகள், இதுபோன்ற விவகாரங்களில் தாங்கள் கடைப்பிடித்து வரும் கொள்கைகளையே பதிலாக தாக்கல் செய்துள்ளன“ என்றார் ரஞ்சித் குமார்.