வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (12:28 IST)

மயக்கநிலையில் இருந்தவரை பிணவறைக்கு அனுப்பிய மருத்துவர்கள் : பிரேத பரிசோதனையில் உயிர் தப்பித்த நோயாளி

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை இறந்துவிட்டதாக கருதி, பிணவறைக்கு அனுப்பிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மும்பையின் சயான் பகுதியில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் நேற்று நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த சிலர் உடனடியாக சயான் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று, காயத்துடன் கிடந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அந்த நபரை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
 
பிணவறையில் இருந்த பணியாளர்கள் அவரது உடலை நீரால் சுத்தம் செய்து விட்டு உடல்கூறு செய்வதற்காக கத்தியை எடுத்து வெட்ட முயன்றனர். அப்போது இறந்துபோனதாக கருதியவருக்கு இதயதுடிப்பு இருப்பதை அறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனே மருத்துவர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர்.
 
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. இறந்ததாக டாக்டர்களால் உறுதி செய்யப்பட்டவர் உயிருடன் இருந்தது மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மருத்துவர்களின் கவனக்குறைவால் இது நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவமனை டீன் சுலேமான் மெர்ச்சண்டை அறிவுறுத்தி உள்ளதாக சயான் போலீஸ் நிலைய காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நபர் யார் என்பது பற்றிய விவரங்களை அறிய மும்பை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.