1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (17:17 IST)

இறந்த சாமியாரின் உடலை அவர் உறங்குகிறார் என்று கூறி 6 மாதமாக வைத்திருக்கும் சீடர்கள்

இறந்த சாமியாரின் உடலை, தூங்குவதாகக் கூறி கடந்த 6 மாதமாக ஐஸ்பெட்டியில் வைத்து பாதுகாக்கின்றனர் அவரது சீடர்கள்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் திவ்ய ஜோதி ஜக்ரதி சான்ஸ்தன் என்ற அமைப்பின் மூலம் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் 70 வயதுடைய ஸ்ரீ அஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள். இவருக்கு கோடிக்கணக்கான சொத்து உள்ளது.

இவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது சீடர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். பரிசோதனையில் ஸ்ரீஅஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவரது சீடர்கள் அவர் இறக்கவில்லை அவர் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளார் என கூறி, அவரது உடலை கடந்த 6 மாதங்களாக ஐஸ்பெட்டியில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது சீடர்களிடம் நிலைமையை எடுத்துக்கூறி, உடலை எரியூட்டுவதற்காக பலர் முயன்று வருகின்றனர்.

ஆனால் அவரது சீடர்கள், மருத்துவ ரீதியாக அவர் இறந்திருக்கலாம், ஆனால் அவர் ஆன்மிக ரீதியாக உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் ஆழ்ந்த தியான நிலைக்கு சென்றுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த திவ்ய ஜோதி ஜக்ரதி சான்ஸ்தன் அமைப்புக்கு இந்தியா உள்பட பிரிட்டன்,அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,மத்திய ஐரோப்பா, ஆகிய இடங்களில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சொத்துக்கள் யாருக்கு என்பதில் சீடர்களுக்குள்ளேயே போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும் அவருக்குத் திருமணமாகி 40 வயதில் ஒரு மகன் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

அவர் பெயருக்கு அனைத்துச் சொத்துக்களையும் மாற்ற வேண்டும் என்று சிலர் கோரி வருகின்றனர். மேலும், அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்றும் அவர் துறவியாகவே வாழ்ந்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.

இறந்தவருக்கு அடுத்த நிலையில், இருந்தவரின் பெயருக்கு இத்தனை சொத்துக்களையும் மாற்ற வேண்டும் என்று சில சீடர்கள் கோரி வருகின்றனர். இதில் இதுவரை எந்த ஒரு முடிவு ஏற்படவில்லை.

செத்துக்களை கைமாற்றுவதற்காகவே அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாகக் கூறி அவரது உடலைப் பாதுகாத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த பிரச்சனையில் தீர்வை ஏற்படுத்துவதற்காக நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இறந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று அந்த சீடர்களுள் ஒருபகுதியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.