வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (14:43 IST)

மேல்ஜாதி மாணவணின் தட்டை தொட்டதால் தலித் மாணவனை தாக்கிய ஆசிரியர்

ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் அல்லாத சக மாணவன் சாப்பிடும் தட்டை தொட்டதற்காக, தலித் மாணவனை அடித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
பள்ளி பாடப்புத்தகத்தின் முகப்புப் பக்கத்திலேயே ’தீண்டாமை ஒரு பாவச்செயல்’, ’தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’, ’தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்’ என்று எழுதப்பட்டு இருக்கும். ஆனால், தற்போதும் பள்ளிகளில் தீண்டாமை கொடூரமாக தொடர்ந்து வருகிறது. 
 
ராஜஸ்தான் மாநிலம் ஓசியன் மண்டலத்திற்கு உட்பட்ட பெர்டன் கா பாஸ் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருபவர் தினேஷ் மெக்வால். இவர் தலித் பிரிவை சேர்ந்த மாணவர்.
 
இந்த பள்ளியில் தலித் மாணவர்கள் சாப்பிடும் தட்டுக்கள் மற்றும் தலித் அல்லாத மாணவர்கள் பயன்படுத்தும் தட்டுக்கள் என தனித்தனியாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது.
 
இந்நிலையில் மாணவன் தினேஷ் மெக்வால் தலித் அல்லாத மாணவர்கள் பயன்படுத்தும் தட்டை தொட்டிருக்கிறார். இதனைக் கண்ட ஆசிரியர் ஹெமராம் ஜாட் தினேஷ் மெக்வலை ஏன் பிற்படுத்த சாதியை சேர்ந்தவர்களின் உணவு சாப்பிடும் தட்டை தொட்டாய் என கேட்டுக் கொண்டே கடுமையாக தாக்கியிருக்கிறார்.
 
வலி தாங்க முடியாமல் கதறிதுடித்த தினேஷ் வலி பொறுக்காமல் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தனது தந்தை மலராமிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து மலராம், தினேஷ்சை அங்கிருக்கும் சமுதாய சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
 
ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் ஜோத்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரை செய்திருக்கின்றனர். பின்னர் தினேஷ் ஜோத்பூர் அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்நிலையில் மலராம் தனது 11 வயது மகனை தீண்டாமை நோக்குடன் ஆசிரியர் அடித்து உதைத்து துன்புறுத்தியிருப்பது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஹெமராம் ஜாட்டை காவல் துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கல்வித்துறையும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.