1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (18:36 IST)

இந்தியாவின் அதிபர் போல நரேந்திர மோடி நடந்து கொள்கிறார் - டி.ராஜா

இந்தியாவின் அதிபர் போல நரேந்திர மோடி நடந்து கொள்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.
 
மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதச்சார்பற்ற இந்தியாவின் சவால்களும், அச்சுறுத்தல்களும் என்ற கருத்தரங்கில் அவர் பேசியது:
 
இந்திய மக்களின் மனசாட்சியின் ஒரு பகுதியாக மாறிப்போனவர் மகாத்மா காந்தி. அவரது நினைவு நாளில் அவர் கட்டிக்காத்த மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பேசுவது பொருத்தமானது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், சீக்கியம், புத்தம், சமணம் என அனைத்து மதத்தினரும் வாழும் நாடு இந்தியா. மதங்கள் மட்டுமல்ல பல்வேறு வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றும் மக்களும் இங்கு வாழ்கிறார்கள்.
 
ஆனால், இந்துத்துவ சக்திகள் இந்தியாவை இந்து நாடாக்க முயற்சிக்கிறார்கள்.
 
அம்பேத்கர் மட்டும் வளைந்து கொடுத்திருந்தால் விடுதலைக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் போல மதச்சார்புள்ள நாடாக மாறியிருக்கும். மதவாதிகளின் கருத்துக்களுக்கு உடன்படாத அம்பேத்கர் இந்தியாவை ஜனநாயக குடியரசு நாடாகப் பிரகடனப்படுத்தினார்.
 
பிரதமர் நரேந்திர மோடி அதிபர் போல நடந்து கொள்கிறார். பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் மதிக்கப்படுவதில்லை. மாநிலங்களவை தேவையற்றது என்பது போல முன்னாள் கேபினட் செயலாளர் ஒருவர் கட்டுரை எழுதுகிறார்.
 
கட்டாய மதமாற்றம் குறித்து கேள்வி எழுப்பினால் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரத் தயார் என்கிறார்கள். இப்போது அரசியல் சட்டத்தில் இருந்து மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க முயற்சிப்பது குறித்து கேட்டால் அது குறித்து விவாதிக்கலாம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார்.
 
இந்தியாவின் அடிப்படை கோட்பாடுகளை தகர்க்க பாஜக அரசு திட்டமிடுகிறது.
 
மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள இந்துத்துவ சக்திகளால் நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இதனை முறியடிக்க வேண்டும் என்றார்.