வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 29 அக்டோபர் 2014 (22:35 IST)

குஜராத் மாநிலத்தை நிலோபர் புயல் தாக்குகிறது: 30,000 மக்கள் வெளியேற்றம்

அரபிக்கடலின் மத்திய மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு நிலோபர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதி தீவிரமாக மாறியுள்ள இந்த புயல் தற்போது குஜராத் அருகே நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி குஜராத்தின் நலியா நகருக்கு தென் மேற்கே 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் வடக்கு–வடகிழக்கு நோக்கி நகர்கிறது.
 
இந்தப் புயல் பாகிஸ்தான் கடற்கரை மற்றும் வடக்கு குஜராத் பகுதியில் உள்ள நலியாவில் வருகிற 1 ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
குஜராத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் புயல் கரையை கடப்பதால் சவுராஸ்டிரா, கட்ச், மாவட்டங்களில் நாளை முதல் பலத்த மழை பெய்யும். காற்றின் வேகம் 210 கிலோ மீட்டர் வரை இருக்கும். இதனால் குஜராத் மாநில அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
 
கட்ச் மாவட்டத்தில் 8 தாலுகாவில் உள்ள 128 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் மக்கள் இன்று வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
 
தேசிய மீட்பு படை, தேசிய பேரிடர் குழு போன்ற அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இந்திய விமானப்படையும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
 
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 12 ஆம் தேதி தாக்கிய ஹூட்ஹூட் புயலால் ரூ.14,840 கோடி இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.