1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (12:01 IST)

குற்றப் பின்னணி உடைய 14 மத்திய அமைச்சர்கள் மீது நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து, குற்றப் பின்னணியுள்ள 14 மத்திய அமைச்சர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் கௌடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“குற்றப் பின்னணியுள்ள மத்திய, மாநில அமைச்சர்களை நீக்கும்படி பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அரசில் குற்றப் பின்னணியுள்ள நிதின் கட்கரி, உமா பாரதி, நிஹல் சந்த், உபேந்திர குஷ்வாஹா உள்பட 14 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இந்த 14 பேரும் அமைச்சர்களாக நீடிப்பதற்கு நாட்டு மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு பிரதமர் மோடிக்கே உள்ளது.

மோடி தற்போது எடுக்கும் நடவடிக்கையில்தான் அவர் உச்ச நீதிமன்றத்திற்கு எந்த அளவுக்கு மரியாதை அளிக்கிறார் என்பது நிரூபணமாகும்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மோடி எந்த மாதிரியான முன்னுதாரணமாகத் திகழ்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு மோடி உரிய மதிப்பளிக்க வேண்டும்.

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோதும் இந்த விவகாரத்தில் முன்மாதிரியாக இருந்ததில்லை. அப்போது அவரது அமைச்சரவையில் குற்றப் பின்னணியுடைய பாபு பொக்கிரியா, புருஷோத்தம் சோலங்கி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்“ என்று ராஜீவ் கௌடா தெரிவித்துள்ளார்.