தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்புகளும், பலிகளும் சீனாவை தாண்டி விட்டன. மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது கொரோனா.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள முதல் இரண்டு நாடுகள் சீனா மற்றும் இந்தியா ஆகும். ஜனவரி மாத தொடக்கத்திலேயே உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் கொரோனா பரவினால் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தது. காரணம், இந்தியாவின் மக்கள் தொகையும், மக்கள் நெருக்கடி மிகுந்த நகரங்களும்தான்.
முதன்முதலாக சீனாவில் தொற்று ஏற்பட்டாலும் தற்போது சீனாவின் எண்ணிக்கையை முறியடித்து முன்னேறி வருகிறது இந்தியாவின் பாதிப்பு. முக்கியமாக இந்தியாவில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக இருப்பவை மத்திய, மாநில அரசுகளின் தலைநகரங்களாகவும், தொழில் கேந்திரங்களாக உள்ள பகுதிகளுமாக இருக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் தலைநகரான டெல்லி அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழ்நாட்டிலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் தலைநகரமான சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் 16,281 ஆக உள்ளது. 316 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 8,003 பேர் குணமடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் டெல்லி மிகவும் குறுகிய பரப்பளவை கொண்டது. கிழக்கு டெல்லியின் பெரும்பான்மையான பகுதிகள் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகள் உள்ள நிலையில் மொத்த டெல்லியின் அதிகமான மக்கள் மற்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 50 கி.மீ பரப்பளவிற்குள் 2 கோடி மக்கள் வாழும் பகுதியாக உள்ள டெல்லியில் இத்தனை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது கட்டுப்படுத்த முடியாத சூழலுக்கு உட்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் சமூக இடைவெளியை பேணுவதும், முகமூடிகளை அணிவதும் அவசியம் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தாலும் மக்கள் அதை பின்பற்றாமல் இருப்பது கொரோனா பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. டெல்லியில் இவ்வளவு பாதிப்புகள் அதிகரித்துள்ள போதிலும் நேற்று வரை இந்தியா கேட் பகுதியில் மக்கள் பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், மாஸ் அணியாமலும் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். ஊரடங்கை பின்பற்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கெஜ்ரிவால் அரசு டெல்லி – ஹரியானா இடையேயான போக்குவரத்து நெடுஞ்சாலை முதலானவற்றையும் மூடியிருந்தது.
டெல்லியில் வாழும் பலர் டெல்லியின் புற எல்லைப்பகுதியான ஹரியானாவில் பணிபுரிபவர்களாக இருக்கின்றனர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மூடப்பட்ட எல்லைகளை திறக்க சொல்லி அவர்கள் பலர் சாலைகளில் மறியல் செய்து வருகின்றனர். இதுபோன்ற சூழல்களால் இந்தியாவின் தலைநகரம் நாளுக்கு நாள் கொரோனாவை அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
டெல்லியில் நிலைமை இவ்வாறு என்றால் தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் நிலைமை தீவிரமடைந்து வருகிறது. டெல்லியை விட பரப்பளவில் பெரிதாக சென்னை இருந்தாலும், பரப்பளவிற்கு ஏற்ற மக்கள்தொகையும் அதிகம். சென்னையின் குடிமக்களாக பதிவு செய்யப்பட்டுள்ள மக்கள் சுமாராக 1 கோடிக்கும் மேல் என்றாலும் வெளி மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலுருந்தும் சென்னைக்கு வேலைக்காக வருபவர்கள் ஏராளம். சென்னையில் மட்டும் இதுவரை 12,762 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 102 பேர் இறந்துள்ள நிலையில் 6330 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்புகள் குறித்து பேசியுள்ள சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் “மற்ற மாவட்டங்களை விட அதிகமாக சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதாலேயே பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது 82 சதவீத பாதிப்புகள் அறிகுறி அற்றவையாகவே உள்ளன என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை குறைத்துக் கொள்ள போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பரிசோதனைகள் செய்யும்போதே இவ்வளவு பாதிப்புகள் கண்டறியப்படும் நிலையில் பரிசோதனையை குறைக்க கூடாது என்று தமிழக எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை பட்டியலிட்டுள்ளது, அதிதீவிர பரவல் பகுதிகளாக கருதப்படும் இந்த பகுதிகளில் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களும் அடக்கம். அதன்படி பார்க்கையில் மக்கட்தொகை அதிகம் கொண்ட தலைநகரங்கள் அதிகமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் உள்ள கொரோனா பாதிப்புகளில் 70 சதவீதம் பாதிப்புகள் 13 நகரங்களுக்குள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.