1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 4 மே 2015 (07:48 IST)

காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார்: சீதாராம் யெச்சூரி

நாடாளுமன்றத்தில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.


 

 
அண்மையில் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் பேரணி குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி சென்றபோது அதில் மார்க்சிஸ்டு கட்சியும் கலந்து கொண்டது.
 
இந்நிலையில் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
நாடாளுமன்றத்துக்குள் நாங்கள் காங்கிரசுடன் நில மசோதா, மதச்சார்பற்ற கொள்கைகள் போன்ற மக்களின் நலன்சார்ந்த அனைத்து பிரச்சினைகளிலும் இணைந்து செயல்படுவோம்.
 
அதே நேரம், தேசிய அளவில் காங்கிரசின் முன்னணியிலோ அல்லது அதன் கூட்டணியிலோ இணைந்து பணியாற்ற மாட்டோம். அது பலன் தராது.
 
தேசிய அளவில் ஒரு வலுவான முன்னணி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நோக்கம். ஆனால், தேசிய அளவில் பல்வேறு மாநில கட்சிகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான கொள்கைகளை கொண்டவைகளாக திகழ்கின்றன.
 
எனவே தற்போதைய நிலையில் தேசிய அளவில் ஒரு முன்னணி உருவாகும் என்று தோன்றவில்லை. எனினும், தற்போதைக்கு காங்கிரஸ் மட்டுமே மாற்று சக்தியாகத் திகழ்கிறது.
 
அண்மையில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நன்றாக அமைந்தது.
 
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் மாற்றம், தொழிலாளர் கொள்கைகளில் சீர்திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதால் இதிலும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட கூடிய புதிய வாய்ப்பு உருவாகும் என்று நம்புகிறேன்.
 
பீகார் மாநில சட்டசபைக்கு விரைவில் நடக்கவுள்ள தேர்தல் பாஜக எதிரான கட்சிகளுக்கு கடுமையான சோதனையாக இருக்கும்.
 
முதலில் ஜனதா பரிவார் கட்சிகள் இணைந்து எவ்வாறு செயல்படுகின்றன என்பதும், இந்த கட்சிகளின் இணைப்பின் மூலம் என்ன வெளிப்படுகிறது என்பதுதான் இதில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது ஆகும். இதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.