காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்குமாறு அழைப்பு விடுத்ததை எற்று, நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார் பா.ரஞ்சித். இருவர் சந்திப்பின்போது ராகுல்காந்தி சமீபத்தில் காலா திரைப்படத்தை பார்த்ததாகவும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சாதி, மதம் போன்ற பிரிவினைகளை ஒழிக்க காலா, கபாலி, மெட்ராஸ் மாதிரியான திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை தரும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இறுதியாக பா.ரஞ்சித், பேரறிவாளன் விடுதலை குறித்து ராகுல் காந்தியிடம் பேசியதாகவும், அதற்கு அவர் பேரறிவாளன் விடுதலையில் நாங்கள் ஒரு தடையாக இருக்கமாட்டோம் எனவும், தன்னால் முடிந்தவரை அவருக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில், ‘மெட்ராஸ், கபாலி, காலா போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் சந்தித்தேன்.
ரஞ்சித்துடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினேன். அவரோடு பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உரையாடல் தொடரும் என நம்புகிறேன்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.