1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 29 ஜூன் 2015 (11:01 IST)

காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம் ஆனால் கூட்டணி கிடையாது: சீதாராம் யெச்சூரி

பிரச்சினைகளின் அடிப்படையில் காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும், ஆனால் கூட்டணி இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
 
இது குறித்து சீதாராம் யெச்சூரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
 
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பிற கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று நாங்கள் எதற்காக கூறினோம் என்றால், அது நரேந்திர மோடி அரசின் கொள்கைகளை எதிர்க்கவே.
 
அப்படித்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதா பிரச்சினையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரசுடன் இணைந்து குடியரசுத்தலைவரை நாங்கள் சந்தித்தோம். இவ்வாறு பிரச்சினைகளின் அடிப்படையில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார்.
 
ஆனால்  நாடாளுமன்றத்துக்கு வெளியே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் முன்னணி அல்லது கூட்டணி விஷயத்தில் சிந்தித்து தான் முடிவு எடுக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத மதசார்பற்ற கட்சிகளையே நாங்கள் ஒன்றிணைக்கிறோம்.
 
ஏனென்றால், காங்கிரஸ் கட்சிதான் மதவாத பாஜகவை ஆட்சியில் அமர்த்தியது. காங்கிரசின் ஊழல் மற்றும் பொருளாதார கொள்கைகளால்தான் இன்று பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.
 
அதே கொள்கைகள், நடவடிக்கைகளைதான் காங்கிரஸ் கட்சி தற்போதும் பின்பற்றி வருகிறது. எனவே அந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
விவசாயிகளுக்கு எதிரான நில மசோதாவை நிறைவேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நில மசோதாவை பாஜக ஆதரித்தது.
 
பாஜக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை, திருத்தங்களுடன் மீண்டும் ஏன் பாஜக கொண்டு வந்தது? இந்த விவகாரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஏன் 3 முறை அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது? இந்த கேள்விகளுக்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.