வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : சனி, 26 ஜூலை 2014 (13:42 IST)

விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க, மத்திய அரசு புதிய யோசனை

பழங்கள் மற்றும் காய்கறிகளை எந்தவிதத் தடையும் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்குமாறு மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. இதன் மூலம் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று மத்திய நுகர்வோர் நலன், உணவு பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் பாடில் தன்வே, மாநிலங்கள் அவையில் தெரிவித்துள்ளார்.
 
காய்கறிகள், பழ வகைகளை இவ்வாறு இலவசமாக எடுத்துச் செல்லும்போது அதிக அளவு கையிருப்பில் இருக்கும் சந்தைப் பகுதியில் இருந்து குறைந்த அளவு கையிருப்பு உள்ள சந்தைக்கு அதிகப்படியானவற்றை மாற்றி வழங்க முடியும். இதற்கான வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தின்படி இதைச் செயல்படுத்த முடியும். 
 
அதேபோல கள்ளச் சந்தை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நடைமுறை சட்டம் 1955, கள்ளச் சந்தை தடுப்பு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் நிர்வாகச் சட்டம் 1980, ஆகியவற்றின் கீழ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
2014-15ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளது போல் அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், அதன் கையிருப்பை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக விலைவாசி கட்டுப்பாட்டு நிதிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த காலத்தில் கரும்புக்கான நிலுவைத் தொகை
 
மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள் விவசாயிகளுக்கு கரும்பு விலைக்கான நிலுவை தொகை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 1966-ன் படி கரும்பு வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு அதற்கான விலையை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க தவறினால் இதற்கான வட்டியுடன் நிலுவை தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் ராவ் சாகிப் பாடில் தன்வே மாநிலங்கள் அவையில் தெரிவித்தார்.