வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (13:54 IST)

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க போறோம்!? – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

Sethu samuthiram
ராமர் பாலம் இருந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் இல்லை என்று கூறியிருந்த மத்திய அரசு ராமர் பாலத்தை பாரம்பரிய தேசிய சின்னமாக அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

தனுஷ்கோடி – இலங்கை இடையே உள்ள பகுதி ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. ராமாயண புராணத்தில் இந்த பாலம் ராமர் கட்டளையின்பேரில் வானரங்களால் கட்டப்பட்டதாக உள்ளது. இந்த பகுதியில் கால்வாய் அமைத்து கப்பல்கள் செல்ல வழி வகுக்கும் சேது சமுத்திர திட்டத்திற்கும் இது ஆன்மீக பகுதி என்பதே இடையூறாக உள்ளது.

இந்நிலையில் ராமர் பாலம் இருந்ததற்கான சரித்திர சான்றுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் ராமர் பாலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, அப்பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கான சரித்திர சான்றுகள் இல்லை என தெரிவித்திருந்தது.

அதை தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ராமர் பாலம் குறித்து சுப்பிரமணியசுவாமி தொடங்கிய வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றத்திற்கு பதிலளித்த மத்திய அரசு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒருவேளை அப்பகுதி தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் சேது சமுத்திர திட்டம் அமல்படுத்துவதில் சிக்கல் எழும் என்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Edit By Prasanth.K