வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (11:20 IST)

11 பேர் தற்கொலை : வெளியான சிசிடிவி பதிவுகள் : நடந்தது என்ன?

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முக்கிய தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

 
டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 1ம் தேதி இரவு கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும் ஒரே ஒரு முதிய பெண் மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர். 
 
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அந்த வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் அனைவரும் சொர்க்கம் செல்ல வினோத வழிபாடு செய்ததும் வழிபாட்டிற்கு பின்னர் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. ஆனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழைகள் அல்ல இதற்கு பின்னால் யாரேனும் இருக்க வாய்ப்பிருப்பதாக போலீசாரிடம் அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். 

 
இந்த விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்படும் மந்திரவாதி காடா பாபா தற்போது தலைமறைவாகி விட்டார். எனவே, அவரை போலீசார் வலை வீசி  தேடி வருகின்றனர். 
 
வீட்டிற்குள் இருந்து 11 குழாய்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. அந்த அறையில்தான் அவர்கள் தற்கொலைசெய்துள்ளனர். அதாவது, தங்கள் ஆன்மா அந்த குழாய் வழியாகவே வெளியேறும் என அவர்கள் தங்கள் டைரியில் குறிப்பிட்டுள்ளனர்.  அதேபோல், அவர்கள் தற்கொலை செய்து கொண்ட அறையின் கதவு உட்பக்கம் தாழ்பாள் போடாமல் இருந்ததும் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த போலீசார்  “இந்த வழக்கை நாங்கள் இரண்டு கோணங்களில் விசாரித்து வருகிறோம். ஒன்று தங்களை காப்பாற்றும் சக்தி வாசல் வழியாக வரும் என அவர்கள் நம்பி இருக்கலாம். அல்லது 12வது நபர் அங்கிருந்து தற்கொலையை கவனித்திருக்கலாம்” என தெரிவித்தனர்.
 
இந்நிலையில், வீட்டின் அருகிலிருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகப்படும்படி யாரும் அன்று அவர்களின் வீட்டிற்கு வரவில்லை. மாறாக இரவு 10 மணியளவில் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் 5 நாற்காலிகளை எடுத்து வருவதும், சிறுவர்கள் கயிறுகளை எடுத்து வருவதும் பதிவாகியுள்ளது. எனவே, அவர்கள் சொர்க்கத்தை அடையவேண்டும் என விரும்பியே தற்கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 
ஆனால், இந்த மூடநம்பிக்கையை அவர்களின் மனதில் ஏற்றியது யார்? காடா பாபாவுக்கு இதில் என்ன தொடர்பு? தற்கொலை செய்த போது ஒரு நபர் இருந்தாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.