1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (14:40 IST)

குழந்தைகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய நித்யானந்தா; போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு

ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு ஆபாச வீடியோ காட்டியதாக நித்யானந்தா மீது புகார்.

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் வழக்கு போன்றவை பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று தலைமறைவாகிவிட்டார். நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் குழந்தை கடத்தல் வழக்கில் குஜராத் போலீஸார் இண்டர்போலை நாடிய நிலையில், அவருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் அகமதாபாத்தின் நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த துர்லாபதி என்பவர் போக்சோ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ”நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்கள் காட்டி உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும், குழந்தைகள் நல அமைப்பினரிடமும் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் பேரில் ஆசிரமத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவினர், குழந்தைகளிடம் அதே வீடியோக்களையும் புகைப்படங்களையும் காட்டி உள்ளனர். மேலும் நித்யானந்தாவுக்கு சாதகமாக அறிக்கை பெறும் வகையில் குழந்தைகளை மிரட்டியுள்ளனர். எனவே நித்யானந்தா மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றம், நித்யானந்தா, இன்ஸ்பெக்டர் ராணா, டிஎஸ்பிக்களான கமரியா, ரியால் சர்வையா, சர்தா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், உறுப்பினர்கள் உட்பட14 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டது.