1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (21:41 IST)

தூக்கு தண்டனை கைதி ஹிமாயத் பெய்க்கை பாதுகாப்பான சிறைக்கு மாற்றுவது பற்றி உயர் நீதிமன்றத்தில் விசாரணை

தூக்கு தண்டனை கைதி ஹிமாயத் பெய்க்கை வேறு பாதுகாப்பான சிறைக்கு மாற்றுவது பற்றி ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.க்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி ஹிமாயத் பெய்க் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த ஆண்டு புனே எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.
 
இந்த நிலையில் தீவிரவாதி ஹிமாயத் பெய்க் தனது வழக்கறிஞர் மூலம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘புனே எரவாடா சிறையில் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதே வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டு இருந்த கதீல் சித்திக், புனே எரவாடா சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டார். அதே கதி எனக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் என்னை மீண்டும் மும்பை ஆர்தர் ரோடு சிறைக்கு மாற்ற வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை  நீதிபதி வி.எம்.கனடே முன்னிலையில் வந்தது. அப்போது தூக்கு தண்டனை குற்றவாளி ஹிமாயத் பெய்க்கை எரவாடா சிறையில் இருந்து வேறு பாதுகாப்பான சிறைக்கு மாற்ற முடியுமா? என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இதுகுறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.
 
ஹிமாயத் பெய்க் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.