வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (14:25 IST)

பனிச்சரிவில் சிக்கிய இந்திய வீரர் 4 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

சியாச்சன் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய இந்திய ராணுவ வீரர்களில் ஒருவர் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
 

உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனமந்தப்பா கோப்பாட்
 
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இமயமலையில் சியாச்சின் மலைமுகடு, கடல் மட்டத்திலிருந்த 19 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த சியாச்சின் மலைமுகடு பகுதியில் இந்திய ராணுவ தளம் உள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ராணுவ தளமாகும்.
 
இது மிகவும் உயரமான மலைப்பகுதி என்பதால் எப்போதும் குளிர் அதிகமாக இருப்பது வழக்கம். இந்த மலைப் பகுதி முழுவதும் பனிக்கட்டியாக உறைந்திருக்கும்.
 
எல்லைப்பகுதி என்பதால் ராணுவ வீரர்கள் விழிப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருவது வழக்கம். அங்கு தற்போது, மைனர் 40 டிகிரி குளிர் நிலவுகிறது.
 

 
இந்நிலையில், சியாச்சின் பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவச் சாவடி ஒன்றின் மீது கடந்த புதன் கிழமை திடீரென்று மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்தது. இதனால், இந்த பனிப்பாறைக்கு அடியில் ராணுவச் சாவடி முழுவதுமாக புதையுண்டு போனது. இதில் அங்கிருந்த ஒரு இளநிலை ராணுவ அதிகாரியும், 9 வீரர்களும் உயிருடன் புதையுண்டனர். 
 
அவர்கள் அனைவரும் சென்னை பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது குறித்து தகவல் கிடைத்தும், அந்த இடத்திற்கு ராணுவம் மற்றும் விமானப்படையில் உள்ள சிறப்பு மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
அத்துடன், அதிநவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் ராணுவ குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
ஆனால், அங்கு நிலவும் தட்பவெப்பம் உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றது.
 
இந்நிலையில், இந்த விபத்தில் இடிகபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரரான லான்ஸ் நாயக் ஹனமந்தப்பா கோப்பாட் உயிரோடு மீட்கப்பட்டுள்ளதாக, ராணுவத்தின் வடக்கு கட்டுப்பாட்டுத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் டி.எச்.ஹூடா உறுதி செய்துள்ளார்.
 
இது குறித்து டி.எச்.ஹூடா மேலும் தெரிவிக்கையில், உயிரோடு மீட்கப்பட்டவரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், உடனடியாக இன்று செவ்வாய்க்கிழமை, இந்திய தலைநகர் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
உயிரோடு மீட்கப்பட்டுள்ள ஹனமந்தப்பா கோப்பாட் , கர்நாடக மாநிலத்தின், தர்வாத் மாவட்டத்தில் உள்ள பெடதூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரோடு சேர்த்து மொத்தமாக 10 ராணுவ வீரர்கள், அந்த பனிச்சரிவில் சிக்கியிருந்தனர்.
 
இவரைப் போல மற்றவர்களில் எவரேனும் உயிரோடு புதைந்திருக்க வாய்ப்புள்ளதா என்பது தொடர்பிலான தேடல் பணிகளை, ராணுவம் மற்றும் விமானப் படையின் தேடுதல் அணிகள் மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறார்கள்.