1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : திங்கள், 7 ஜூலை 2014 (19:54 IST)

பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகள் அமளி - மக்களவை நாள் முழுமைக்கும் ஒத்திவைப்பு

ரெயில் கட்டண உயர்வு மற்றும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 7ஆம் தேதி) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை இரண்டு முறை அவை கூடியதும், தொடர்ந்து அமளி நிலவியதால், மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அவையை நாள் முழுமைக்கும் ஒத்திவைத்தார்.
 
முன்னதாக, அவை துவங்கியதும், மறைந்த உறுப்பினர்கள், பீகார் விபத்து, ஆந்திரா கெய்ல் எரிவாயு கிடங்கில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள், சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 
அடுத்து, மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க, எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்குச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். ஆனால், மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விவாதத்தில், விலைவாசி உயர்வுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
 
காங்.,மூத்த நிர்வாகிகளில் ஒருவரான குலாம்நபி ஆசாத், பேசுகையில், புதிதாக ஆட்சிக்கு வந்த மத்திய அரசு மக்களுக்கு விலைவாசி உயர்வைப் பரிசாக வழங்கியிருக்கிறது. பா.ஜ., விலைவாசியைக் குறைக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாக்களித்துள்ளனர். ஆனால் பா.ஜ.க. அரசு செயல்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இப்படி விலைவாசியை உயர்த்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். சாப்பிட, உடுத்தக் கூட சிரமப்பட வேண்டியதாக இருக்கும் என்று கூறினார்.

மாயாவதி பேசுகையில், மத்தியில் ஆளும் அரசு ஏழைகள், விவசாயிகள் நிலை குறித்து கவலைப்படவில்லை. விலைவாசி உயர்வு விஷயத்தில் தீர்வு காணுவதை விட, பிரச்னைகளையே உருவாக்கி வருகிறது என்றார்.
 
இடதுசாரியைச் சேர்ந்த சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று சொன்னீர்கள் ஆனால் ஆட்சி அமர்ந்த நாள் முதல் அப்படியேதான் இருக்கிறது. கடந்த ஆட்சி கையாண்ட முறையே பா.ஜ., ஆட்சியிலும் நீடிக்கிறது. விலைவாசி உயர்வை எதிர்த்துக் குரல் கொடுத்த பிரதமர் மோடி அதனையே தற்போது செய்துகொண்டிருக்கிறார். மக்கள் உங்களுக்கு ஆட்சி அமைக்க தீர்ப்பளித்தும், விலைவாசி உயர்வை நிறுத்தி வைக்க முடியவில்லை என்றார். 
 
தி.மு.க, தரப்பில் பேசிய கனிமொழி எம்.பி, வேளாண் மற்றும் நீர் மேலாண் கொள்கையில் மத்திய அரசிடம் தெளிவு இல்லை. விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைத்தரகர்களே பயன்பெறுவர். உணவுப் பொருளைச் சேமிக்கப் போதிய கிடங்குகள் இல்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பேசினார்.
 
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா, மக்களவையில், காங்கிரஸ் கட்சிதான் ஒரே மிகப் பெரிய கட்சியாகும். எங்களுக்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக் கட்சிகள் உள்ளன. நாங்கள் நிச்சயம் எதிர்க் கட்சி அந்தந்தை பெறுவோம். ஆனால் இதற்காக, வழக்குத் தொடரத் திட்டமிடவில்லை என்றார்.
 
எதிர்க் கட்சிகளின் அமளி ஒரு புறம் இருக்க, ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ரெயில்வே பட்ஜெட்டை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 9 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையையும், 10ஆம் தேதி பொது பட்ஜெட்டையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்.