ராமர் கோவிலுக்கு வெள்ளி கிரீடம் காணிக்கை அளித்த பிச்சைக்காரர்
விஜயவாடா நகரில் உள்ள ராமர் கோயில் முன்பு பிச்சை எடுக்கும் யாடி ரெட்டி(75) என்பவர் 1.50 லட்சத்தில் வெள்ளிக் கிரீடம் காணிக்கை அளித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த யாடி ரெட்டி(75) என்பவர் இளம் வயதில் பல வேலைகள் பார்த்து வந்துள்ளார். 45 வருடங்களாக ரிக்ஷா ஓட்டி வந்துள்ளார். பின்னர் உடல்நலம் குறைவு காரணமாக ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகரில் இருக்கும் ராம் கோவில் முன்பு பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார்.
தற்போது அந்த ராமர் கோவிலுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கிரீடம் காணிக்கையாக வழங்கியுள்ளார். அதோடு ரூ.20 ஆயிரம் அன்னதானத்துக்காக நன்கொடை கொடுத்துள்ளார். இதுகுறித்து யாடி ரெட்டி கூறியதாவது:-
நான் இன்று வரை உயிருடன் இருப்பதற்கு காரணம் அந்த கடவுள் தான். எனக்கு வலிமை தந்த கடவுளுக்கு கணிக்கை செலுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
இதுகுறித்து ராமர் கோவிலின் நிர்வாகத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கவுதம் ரெட்டி கூறியதாவது:-
யாடி ரெட்டி பல ஆண்டுகளாக இந்த கோவில் வாசலில் பிச்சை எடுத்து வருகிறார். தனக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு கடவுளுக்கு பணிகள் செய்வதன் மூலம் பணம் வாழ்க்கையல்ல என்பதை நிரூபித்துள்ளார் என்று கூறினார்.
பணம் தட்டுபாடு மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாத இந்த சூழலில் இவர் எப்படி இவ்வளவு பெரிய தொகையில் காணிக்கை செலுத்த முடியும்? அதுவும் ஏன் வெள்ளி கிரீடத்தை இவர் இப்போது காணிக்கையாக செலுத்தியுள்ளார்? இதுபோன்ற கேள்விகள் எழுந்தாலும். இந்த கோவிலின் நிர்வாகத் தலைவர் கவுதம் ரெட்டி ஒரு எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.