வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (19:40 IST)

மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்க தடை

மகாராஷ்டிராவில் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மாட்டு இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிராவில் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மாட்டு இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஒப்புதலுக்கு காத்திருந்த இச்சட்டத்திற்கு நேற்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அம்மாநிலத்தில் இச்சட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது. இச்சட்டத்தை மீறி யாராவது மாட்டு இறைச்சியை விற்பனை செய்தால் அவர்கள் உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
அவ்வாறு கைது செய்யப்பட்டால் அவர்கள் ஜாமீனிலும் வெளிவர முடியாது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்க முடியும். அதே போல் இச்சட்டத்தின் மூலம், பசு, காளை மற்றும் கன்றுக்குட்டிகளை ஏற்றுமதி செய்வதற்கும், அவற்றின் இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிராவில் சிவசேனா-பா.ஜ.க கட்சிகள் முன்னர் ஆட்சி செய்த போது, இச்சட்டம் வரைவு செய்யப்பட்டது. ஆனால் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்தியில் ஆட்சி செய்த என்.டி.ஏ. அரசும், காங்கிரஸ் அரசும் நெடுங்காலமாக தாமதம் செய்து வந்தன.
 
இந்நிலையில் பா.ஜ.க. எம்.பி. கிரித் சோமையா மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த ஆறு எம்.பி.க்கள் குடியரசுத்தலைவர் பிரணாப்பை சந்தித்து இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க  கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நேற்று இச்சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் ஒப்புதல் அளித்தார்.