வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (09:55 IST)

ஜம்மு காஷ்மீரில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் மாட்டு இறைச்சி மீதான  கட்டுப்பாடு இரண்டு மாத காலத்துக்கு தளர்த்தப்பட்டுள்ளது.


 
 
ஜம்மு காஷ்மீரில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பரிமோக்செத் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம் பசுவதை தடுப்புச்சட்டத்தின் மூலம் மாநிலத்தில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடைவிதிப்பதாக உத்தரவிட்டது.
 
மேலும் நீதிமன்றத்தின் உத்தரவை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இறைச்சி பிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறைகளும் வெடித்தன.
 
இதனிடையே மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை  விசாரித்த நீதிமன்றம் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசுக்கு சம்மன் அனுப்பியது.
 
மாட்டு இறைச்சி விற்பனைக்கு இருவேறான தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதால் சட்டம் ஒழுங்கில் பிரச்சனை ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, இவ்விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட தனி அமர்வை அமைக்குமாறு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை 2 மாத காலத்திற்கு தளர்த்துவதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.