1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 4 ஜனவரி 2015 (11:42 IST)

வங்கிகளின் செயல்பாடுகளில் அரசியல் குறுக்கீடுகளை பிரதமர் அலுவலகம் அனுமதிக்காது - நரேந்திர மோடி

வங்கிகளின் செயல்பாடுகளில் அரசியல் குறுக்கீடுகளை பிரதமர் அலுவலகம் அனுமதிக்காது என்றும் அதேசமயம், பொதுமக்கள் நலன்கருதி மேற்கொள்ளப்படும் தலையீடுகளை மத்திய அரசு ஆதரிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 
வங்கித் துறையின் 2 நாள் மாநாடு புணேவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த மாநாட்டில் நரேந்திர மோடி பேசியதாவது:-
 
வங்கிகளின் செயல்பாடுகளில் அரசியல் குறுக்கீடுகளை பிரதமர் அலுவலகம் அனுமதிக்காது. அதேசமயம், பொதுமக்கள் நலன்கருதி மேற்கொள்ளப்படும் தலையீடுகளை மத்திய அரசு ஆதரிக்கும்.
 
நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக வங்கிகள் திகழ்கின்றன. உலகின் தலைசிறந்த வங்கிகளின் பட்டியலில், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வங்கிகள் இடம்பெற்றுள்ளன.
 
அதேபோல், இந்திய வங்கிகளும் உலக அளவில் சிறந்த நிலைக்கு உயர வேண்டும். இதற்கு, வங்கிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்.
 
கணினி வழிக் குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், நாட்டில் குறைவாக உள்ள நிதித் துறை தொடர்பான கல்வியறிவை வளர்க்கவும், அர்ப்பணிப்புடன்கூடிய குழுக்களை வங்கிகள் அமைக்க வேண்டும்.
 
பெருநிறுவனங்களின் சமுதாயப் பங்களிப்பு திட்டத்தின்கீழ், வங்கிகள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு துறையை கவனத்தில் கொண்டு அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
 
தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான காரணிகளை வங்கிகள் மறுவரையறை செய்ய வேண்டும் என்று நரேந்திர மோடி கூறினார்.