பெங்களூரு அருகே ஏழு தலைப்பாம்பின் தோல்??: வழிபட குவியும் மக்கள்
பெங்களூரு அருகே உள்ளே கிராமம் ஒன்றில் ஏழு தலைப்பாம்பின் தோல் கிடப்பதாக கூறி அதை வழிபட மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் காட்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருக்கு அருகே உள்ள கனகபுரா என்ற ஊரின் அருகே மரிகவுடானா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் 7 தலைகள் கொண்ட நாகப்பாம்பு ஒன்று நீண்ட நாட்களாக வாழ்ந்து வருவதாக மக்கள் நம்பி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்கள் முன்பு அந்த கோவில் வளாகத்தை சுத்தம் செய்த ஒருவர் அங்கு பாம்பு தோல் ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார்.
இதை உடனடியாக அந்த கிராமத்து மக்களிடம் சொல்ல, அது காட்டுத்தீ போல் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியுள்ளது. பலர் 7 தலைப்பாம்பின் தோலை வணங்குவதற்காக பல ஊர்களிலிருந்தும் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் விஞ்ஞானரீதியாக இதுவரை 7 தலை நாகம் இருப்பது நிரூபிக்கப்படவோ அல்லது நேரில் பார்த்ததாகவோ எந்த விதமான ஆவணங்களும் இல்லை என்று அறிவியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.