1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (21:54 IST)

அரவிந்த் கெஜ்ரிவால் கைது..! டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.!!

புதிய மதுமானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஏற்கனவே முன்னாள் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதே வழக்கில் தெலுங்கானா முன்னாள முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவும் மார்ச் 16ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இதனிடையே மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.
 
டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.  டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரவிந்த் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என நீதிபதி தெரிவித்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார்.

 
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.